கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வியாழன், ஜூலை 26, 2018

வெளிச்சத்தைவிற்போம் வாருங்கள்.-பகுதி நான்கு

கம்பஸ் முடிந்து வேலை கிடைத்து கேகாலையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பற்றிய கவலையுமில்லை. வாழ்க்கை சுகமாக ஒடிக்கொண்டிருந்தது. 

யாழ்ப்பாணத்தக்கு வேலை செய்யச் சென்றபோதுதான் மீண்டும் மின்சாரம் பற்றிய நினைப்பே வந்தது. அதற்கு சனி ஞாயிறு எண்டால் மின்சாரத்தை வெட்டி வைக்கும் மின்சார சபையும்  ஒரு காரணம். அவைகள் மரக்கொப்பு வெட்டுறம் ஹை டென்சன் மாபிளிலை காபன் கழுவுறம் எண்டு அரைவாசி நாள் கரண்டை கட்  பண்ணிப் போடுவாங்கள்.

மின்சாரத்திலை தீப்பிடிச்ச மாதிரி நிகழ்ச்சி வந்து கொஞ்ச நாளிலே இடம் பிடித்தது. நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தின்  விரிவுரை மண்டபங்கள் மூன்றாம் மாடியில் இருந்தது. அதற்கு மாணவர்கள் பாண் போறணை எண்டு பெயர் வைத்திருந்தார்கள். மத்தியானம் அதுக்குள்ளை போய்க் குந்தினா அண்டைக்கு குளிச்சமாதிரி வேர்த்து ஒழுகும். மனிசர் நிம்மதியா நித்திரை கொள்ள ஏலாது. கிறீம் ஒவ் த சொசயிட்டி எண்டு அவங்களை எடுத்து வைச்சுக்கொண்டு யாழ்ப்பாண வெயிலில் சீட்வெக்கையிக்கை இருத்தினதிலை எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அதுக்குள்ளை பெடியளும்  சேர்ந்து உதுக்கு ஒரு வழி பண்ண வேண்டும் எண்டு கடிதம்  அனுப்பியிருந்தாங்கள்.

கடிதம்  சபை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

உவைக்கு என்ன வேணுமாம்.  அது அவைத்தலைவர்.

ஒருதரும் ஒரு கதையில்லை.

மௌனம்.

அந்தமண்டபத்துக்கு  ஏசியை பூட்டலாந்தானே... நான் திருவாயைத் திறந்தேன்.

ஆட்டிலெறி அடிச்சவுடனை அலேட்  ஆகிறமாதிரி எல்லாரும் என்ரை முஞ்சியை தடவினார்கள்.

ஆமாம் ஆமாம் எண்டு தலையாட்டுறதை தவிர வேறேதும் அறியாத அந்த சபையில் வந்து சில மாதங்களே ஆனஒருத்தன்  இப்பிடி வாயைதிறப்பான் என  ஒருத்தரும் கனவிலையும் நினைக்கேல்லை போலை...

உது உவளவுக்கும் ஏசிபூட்டுறதெண்டா  என்னசிலவாகும் எவ்வளவு கரண்ட வேணும் எண்டெல்லாம் எமக்குத் தெரியுமே? அவைத் தலைவரின் சீற்றம் சிறிது எட்டிப் பார்த்தது..


ஓ அதுக்கென்ன... எவ்வளவு காசு சும்மா  சிலவளியாம திரும்பிபப்போகுது...முந்திப்படிச்ச ஆக்களிடமிருந்து எவ்வளவு காசு வருகுது. அதுகளை எடுத்து ஏசியையும்அதுக்குகரண்டுக்கு மேலை சோலரையும் பூட்டிவிடாச் சரிதானே... நாங்கள் இனி கிறீன்எனர்ஜியை யோசிக்க வேணும்...


ஏதோ ஒரு பெரிய சாதனையை செய்துவிட் மாதிரி நான் இறும்பூதெய்துவதுக்குள்  மல்ரிபரல்இரைஞ்சமாதிரி ...

கொழும்பிலை இருந்து வந்திட்டு பேக்கதை விசர்க் கதை கதையாதையுங்கோ...

கிபிர் வந்து நல்லாய்ப் பதிஞ்சு போட்டது போலிருந்தது...

நானும் விடேல்லை. வாழ்க்கை திறன் படிப்பிச்ச  இலங்கஸ்வரன் சேர் நீ எதிர் காலத்திலை லோயராய்த் தான் வருவாயெண்டுதிருவாய் மலர்ந்ததை நினைவில் கொண்டு கீழை இருந்து பிப்ரி கலிபராலை வெடிக்கத் தொடங்கினேன்...

சமர் நீண்டு கொண்ருந்தது..

எல்லாரும் மணிக்கூட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.. வழமையா 1 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு முடியுற கூட்டம் அண்டைக்கு முடியேக்கை 5மணி...

பெண்கள் அணியினர் கண்களால் கெஞ்சத்  தொடங்கியிருந்தனர்...
இனி கூட்டம் முடிந்து பிள்ளையளை ஏற்றிக்கொண்டுவந்து கரண்ட் நிற்கமுன்னம் இரவுக்கு சமைக்கவும் வேணும்.

ஆனா அவையளின்ரை கஷ்ட காலம்.. கலியாண கட்டாத ஒன்றும் பேரப்பிள்ளை கண்ட ஒன்றும் வீட்டை வேலை ஒன்றும் இல்லாமல் போறணைக்கு ஏ சி போடுறதை பற்றிபுலம்பிக் கொண்டிருந்தன..


புலம்பல் தொடரும்....

© வாயுபுத்திரன்
26.07.2018




செவ்வாய், ஜூலை 24, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள்- பகுதி மூன்று

அறிவியல் கழகம் இணுவிலில் இருந்தது. எங்கள் பரிசோதனைகளின் களமாக அது விளங்கியது. அப்போது  எங்கள்  ஆராய்ச்சி சாம்பலிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆண்டு பத்து விஞ்ஞான புத்தக அறிவுடன் யாழ்ப்பாணத்துக்கே சாம்பலிலிருந்து மின்சாரம் வழங்கும் பரிசோதனையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். சாம்பலுக்குள் இரு பக்கமும் ஈயத்தகடை வைத்தபோது வோல்டோ மீற்றர் அசைவை காட்டியது. உரேக்கா எண்டு கத்த  இருந்த நேரத்திலைதான் அந்த ஐந்து  சியாமாச் செற்றிகளும் வந்து  தாங்கள்  கொண்டுவந்த சாமான்களைஎறிந்துபோட்டு ஓடின. சாமான்கள் பெருஞ்சத்தத்துடன் வெடித்தன. எங்கையோ கிட்டடியிலை விழுந்திருக்கோணும். காற்றின் அமுக்கம் அறிவியல் கழகம் வரை வந்து  போனது.

எங்கடை ஆராய்ச்சி இடையிலை குழம்பிக் போக சியாமாச் செற்றி மட்டும் காரணமில்லை. மோகன் தன்ரை ஏ எல் படிக்கும் அண்ணனின் இரசாயன புத்தகத்தை வாசித்து வந்தசெய்தியும் தான் காரணம். அதாவது காரத்தில் அல்லது அமிலத்தில் உலோக தகடுகளை வைக்கும்போது மின்னழுத்தவேறுயாடு வரும் என்றதே அது. தவிர வெவ்வேறு உலோகங்களுக்கு வெவ்வேறு அழுத்த வேறுபாடு வரும் எண்டு எழுதியிருந்தது. இன்னொருவகையில் சொல்லப் போனால் நாங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை ஆரோ ஒருத்தன் நூறு ஆண்டுகளுக்கு முன்னே சொல்லிவிட்டான்...


களைச்சுப்போய் தென்னை மரத்தடியில் இருக்கேக்கதான் சச்சோஅண்ணை அதைக் கொண்டு வந்தார்...

அது ஒரு சிறிய சூரியப் படல்.. விளங்கிற தமிழிலை சொல்லுறதெண்டா கின்ன சோலர் பனல். இப்ப நீங்கள் கையிலை வைச்சுப் பாவிக்கிற 10 .1 டப்பின்ரை அளவு இருக்கும். அந்தப் பனல் நேரடியாக சிறிய ரேப் ரெக்கோடருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. 

வெய்யிலில் வைத்தபோது கசட் பாடியது....கால் வலிக்கும்  கை வலிக்கும மாறப் போவதில்லை. எங்கள் கனவு நனவாகு மட்டும் சேசசசசசசா ரரரரப் போாாாவவவதில்லை. முகில் வந்து வெகிச்சம் குறையும் போதெல்லாம் டேப் இழுக்கத் தொடங்கியது.

நாங்கள்  சோலரை சின்ன கசியோ மணிக்கூடுகளில்  கண்டிருக்கிறோம். ஆனால் இவ்வளவு பெரிய , இரண்டு கைகளையும் மறைக்கக் கூடிய, ஒரு டேப் றைக்கோடரையே பாட வைக்கக் கூடிய பெரிய பனலை நாங்கள் கண்டதில்லை. 

கனவு சாம்பலிலிருந்து சூரியக் கலங்களுக்கு தொத்திக் கொண்டது.


கனவுகள் தொடரும்.



©வாயுபுத்திரன்
24.07.2018




சனி, ஜூலை 07, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள் - பகுதி இரண்டு

பென்ரொச் பற்றரி உட்பட அனைத்துபற்றரிகளும்  பொருளாதாரத் தடையால் யாழ்ப்பாணம் வராத காலத்திலை கட்டையிட்டை ஆறு ரீசாசபிள் பென்ரோச் பற்றரிகள் என்னெண்டு வந்ததென எனக்குத் தெரியாது.ஆனாலும் அந்தபற்றியளிலை இரண்டைஎனது பாவனைக்கு அவன் தந்துதவியிருந்தான். 

பென்ரோச் பற்றிகளை சார்ஜ்பண்ணவெண்டால் ஒரு சார்ஜரும் எங்களிடம்  இல்லை.சைக்கிள் டைனமோவில் இருந்து ரேடியோவுக்கு கொடுக்கும் கம்பிகளை இணைத்து சார்ஜர் சப்ளை கொடுக்கலாம். பற்றரியை இறுக்கிப் பிடிக்கும் கோல்டராக எங்களது பழைய விளையாட்டுச் சாமானிலை பற்றரி போடுற பகுதி பாவிக்கப்பட்டது. அப்பிடி வியையாட்டுச் சாமான்கள் இல்லாத வீடுகளில் வெள்ளை எஸ் லோன் பைப்பும் பூட்டூசியும் பாவிக்கப்பட்டது.

மின்சாரம் இருந்துவிட்டு மின்சாரம் இல்லாமல் போன வலியை யாழ்ப்பாணம் நன்கு அனுபவித்தது.

கலியாண வீடுகள் சாமத்திய சடங்குகள் எண்டு நடக்கேக்கை மட்டும் மின்பிறப்பாக்கிகள் பயன்படும். இந்த ஜெனரேட்டர்கள் கூட பொருளாதாரக் தடைக்கு உட்பட்டவை. பழைய தண்ணிப்பம்பியின் மிசினும் ரிவைண்ட் பண்ணப்பட்டு டைனமோக்களாக மாற்றப்பட்ட மின்சார மோட்டர்களும் இணைந்து ஒரு பலகையில் பூட்டப்பட்டு மினி ஜெனரேட்டர்களாக மாறின. ஒல்வொருவர் குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்ட அரை லிட்டர் மண்ணெயும்சேர்க்கப்பட்டு ஐந்துவீட்டர் மண்ணெண்ணை சேர்க்கப்பட்டது. இந்த மாதிரி ஜெனரேட்டர் இரவு முழுதும் வேலை செய்யவெண்டால் ஐந்து அல்லது ஆறு லீட்டர் மண்ணெண்ணை வேணும். 

சக்திமூலங்கள் யாவும் தடைப்பட்ட போதிலும் மக்கள் சக்தியுடனேயே இருந்தார்கள். எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகனஓட்டங்களும் வாகனபுகையும் இல்லாத நகரமாக யாழ்ப்பாணம் விளங்கியது.

எரிகிற மின்விளக்கு எண்டால் அவை கலியாணவீடு செத்த வீட்டில் அல்லது ஆசுப்பத்திரியை அடையாளம் காட்ட எண்டு ICRC சுற்று வட்டாரத்தில் எரியவிடும் மின்விளக்குகளாக இருந்தன. சந்தியில் ICRC வைத்த மின்விளக்குகளில் படித்ததனால் பல ஆபிரகாம் லிங்கன்களை அரசாங்கமும் ICRC யும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தன.

அப்போதுஆண்டு பத்து படித்துக்கொண்டிருந்த நானும் எனது நண்பன் மோகனனும் சமுதாயத்தின் சக்தி தேவையை பூர்த்தி செய்வோம் என சபதமெடுத்து சாம்பலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பரிசோதனைகளில் இறங்கினோம். எள் என்ன முன்னம் எண்ணையாக நிற்கும் அவன் நவாலியில் பற்றரிக் கடையில்பழுதாகி எறிந்த ஈய நெய்யரிகளைக் காண்டு வந்தான். 

அடுப்பில் அலுமினிய தட்டை வைத்து அதில்நெய்யரித் தட்டுகளை வைத்து உருக்கி ஈயம் பெறப்பட்டது.


சோதினைகள் தொடரும்....


© வாயுபுத்திரன்
07.07.2018

வியாழன், ஜூலை 05, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள்.



தலைப்பை கண்ட உடனையே நீங்கள் சரி உந்தாளும் யாவாரத்திலை இறங்கியிட்டுது எண்டுதான் நினைச்சிருப்பியள். பின்னை நீங்களும் என்னைமாதிரித்தானே இருப்பியள். அவசரக்குடுக்கையள்...பொறுங்கோ நான் சொல்ல வாறதை பொறுமையாக் கேளுங்கோ...

சின்னவகுப்பிலை நீர் காற்று வெப்பம் வெளிச்சம் எல்லாம் இயற்கையானது தூய்மையானது எண்டைல்லாம் படிச்சிருப்பியள். அதிலை தண்ணியை விற்கிற கதை யாரேனும் உங்காலை தீவுப்பக்கம் இருந்துவந்து சொன்னாத்தான் உண்டு. எங்கடை வீட்டுக் கிணறு எந்தளவு ஆழம் எண்டு நீட்டு வயர் போட்டு கலக்கி இறைக்கிற தறுமுவைக்கேட்டாச் சொல்லும். அதிலும் ஊற்று இருக்கு பாருங்கோ சும்மா கடகடவெண்டு ஆறு மாதிரி பெருக்கெடுக்கும். எங்கடை கிணறும் எங்கடைமுன்வீட்டு மனேச்சரின் கிணறும் அப்பித்தான். அம்மிக் குழவியை ஓட்டி ஊற்றை அடைச்சாத்தான் ஒட்ட  இறைக்கலாம்...தண்ணியெண்டா தின்னவேலித் தண்ணியும் தோத்துப்போம்...

ம் . அது எல்லாம் அந்தக்காலம்.

இப்ப தண்ணியும் ஒரு இழுவையிலை வற்றிப்போகுது. அதைவிட உவங்கள்  தண்ணிக்கே எண்ணை கலந்த கதையை சொன்னாப்பிறகு.....

என் செய்யுறது...நானும் காசுக்குத்தான் தண்ணி வாங்கிறனான்...

1990-1995 காலப்பகுதி..
நாங்கள் பள்ளிக்கூடம் போய் மூளை கீளைகொஞ்சம் கொஞசமாக வளரத்தொடங்கின நேரம்......

சனம் எல்லாம் பொருளாதாரத்தடை கஸ்டம் எண்டெல்லாம் பேக்கதை கதைக்கும் பாருங்கோ....சிங்களவனைத் திட்டுங்கள்... விசர்ச் சனம் ...
சிங்களவன் கடவுள் பாருங்கோ..கடவுள்...
கடவுள்  கஸ்டத்தை கொடுத்துத் தான் தடுத்தாட்கொள்ளுறவர் எண்டு அறுபத்து மூன்று நாயனார் கதையும் தெரிஞ்ச சனத்துக்கு விளங்கும்.

உந்தக்கோதாரியிலை விழுந்த கோதம்ப மா இல்லை கண்டியளோ....

மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு.. பெற்றோல் இல்லவே இல்லை.

ரயர்இல்லாததிலை வாழைப்பழமா தேய்ந்த ரயிரெல்லாம் சைக்கிளிலை இருக்கும். வாழைப்பழமா இருந்தாலும் ஆணி கீணி ஒண்டும் அதிலை ஏறாது...
ஆணி எல்லாம்தடை பாருங்கோ..தெருவிலை கறள் ஆணிகிடந்தாலும் களவெடுத்துக் கொண்டுபோடுவாங்கள். பேந்தெங்கை வாழைப்பழ டயரிலை ஆணி ஏற....

சைக்கிள் டைனமோவிலை வாற கறண்ட் ஆடலோட்டம் எண்டும் அதை நாலு டயோட் போட்டு நேரோட்டம் ஆக்கலாம் எண்டதும் தெரியும் அதிலை வாற ஹம் சத்தத்தை நாலு பிக்கோ பரட் கொண்டன்சரை போட்டு வெட்டலாம்  எண்டதும் லெனினின்ரை அண்ணையும் சுரேஸ் அண்ணையும் சொல்லிதந்து செய்தும் தந்தவை...

போட்டிக்கு ஓட கூப்பிட்டாலும் கட்டை எங்களோடை ஓட வரமாட்டான். அவன்ரை சைக்கிலை இருந்து டைனமோவிலை கரண்ட் வந்து அவன்ரை ரிசாஐ் பென்ரோச் பற்றரி நாலும் மின்னனேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்....வேகமா ஓடினா பற்றறிகள் பழுதாப்போடும் எண“டு அவனுக்குத் தெரியும். கல்லுண்டாய் காற்று வந்து ஆனைக்கோட்டைக்கே அடிச்சாலும்அவன்ரை சைக்கிள் சீரான மெதுவோட்டம் ஓடும்....






வெளிச்சம் தொடரும்.....
© வாயுபுத்திரன்
05.07.2018

 வெளிச்சத்தை விற்போம் வாருங்கள் - பகுதி இரண்டு