அண்ணை நீங்கள் எலெக்ரிக் கார் பற்றி எழுதுங்கோவன்....
கேட்டு பலமாதங்களாயிற்று. கேட்டவரும் மறந்திருப்பார்.
இப்ப என்னட்டை எலெக்ரிக் காருமில்லை. ஆனா எழுதோணும் போல கிடக்குது.
இல்லாத போது இல்லாததன் ஞாபக ஏக்கங்கள் அதிகமாகவே வரும். அது மனித இயல்பு.
லீவ். Nissan கொம்பனியின் தனியே மின்சாரத்தில் ஓடும் படைப்பே leaf. Leading, Enviroment friendly Affordable Family carதான் லீவ்.
டெஸ்லா, பி எம் டபிள்யூ, மேசிடிஸ் போன்ற முன்னணி கம்பனிகள் தனியே மின்சாரத்தில் ஓடும் கார்களைத் தயாரித்திருந்தாலும், மின்சாரக்கார் என்றால் நிசான்லீவ் எண்டளவுக்கு உலகப்பிரசித்தத்தில் இருந்நது லீவ்.
மின்சாரத்தில் மட்டும் இயங்கும் கார்கள் பற்றி எனக்கு தெரிய வந்தது ஒரு கதை. அப்போது நான் கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் இரவுக் கடமையில் இருந்தேன். அப்போது நான் எந்தவிதமான விசேஷ வைத்தியத்துறையிலும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கவில்லை. அன்று இரவு குழந்தைகள் விடுதிக் கவனிப்பு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்நது. குழந்தைகள் என்றால் அழும் அடம்பிடிக்கும். அவற்றை கையாள வேறுபல திறமைகளும் இருக்கவேண்டும். ஆடிக்கறக்கிற மாட்டை ஆடியும் பாடிக் கறக்கிற மாட்டை பாடியும் சமாளிக்கத் தெரியவேண்டும்.
அந்தக் குழந்தைக்கு பத்துப் பதினொரு வயதிருக்கும். காய்ச்சலுடன் வந்திருந்த குழந்தையை பரிசோதிக்கவேண்டும். குழந்தை கையில் ஏதோ வைத்திருந்தது. அப்பாவின்ர கார் சாவியை தாங்கோ, டொக்ரர் அங்கிள் பார்க்க வந்திருக்கிறார் பெற்றோர் எனக்கு உதவ முன்வந்திருந்தனர். அந்த நேரம் என்னிடம் காரும்இல்லை கார் பற்றிய அறிவும் இல்லை. ஆனால் கார் புரூம் எண்ட சத்த்தோடை ஓடும் எண்டது தெரியுந்தானே. கதையை தொடக்கினேன். உங்களுக்கு காரில் போகபிடிக்குமோ...குழந்தை நிமிர்ந்து பார்த்தது. யாரிவன் ஒர் பைத்தியக்காரன். கொழும்பு நெரிசலிலை பின்னை என்ன பஸ்ஸிலை போகவா பிடிக்கும் எண்டது போல பார்த்தது. விக்கட் விழாட்டிலும் பரவாயில். பந்து அகலக் கோட்டை தாண்டிப் போய்விட்டது.
உங்கடை கார் பெற்றோலிலை ஓடுமா இல்லை டீசலிலை ஓடுமா? அடுத்த பந்தை வீசினேன்.
இரண்டும் தேவையில்லை. இந்தமுறை பந்து மட்டையில் பட்டு எல்லைக் கோட்டை தாண்டிவிட்டது. உருண்டு தாண்டியதா பறந்து தாண்டியதா...எனக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. எப்பன் சமாளிக்க கஸ்டமான குழந்தைதான்.
Back to basic
காரிலை புரூம் எண்ட சத்த்தோடை வந்தனிங்களா....
இல்லை அங்கிள். எங்கடை கார் சத்தம் போடாது.
ஏன்?
அது எலெக்ரிக் கார்.
இந்தமுறை அடி பட்ட பந்து இரண்டு கால்களுக்கு இடையால் உரசிக்கொண்டு எல்லைக் கோட்டை நெருங்கிக்க கொண்டிருந்தது.
அயர்நது போனேன். நிமிர்ந்து பார்த்தேன்.
ஓம் டொக்டர். அது எலெக்ரிக் கார்தான்.
அன்று இரவு வேலை செய்ததற்கு ஐநூறு ரூபா காசும் எலெக்ரிக் கார் இலங்கையில் இருக்கிறது என்ற அரிய தகவலும் எனக்குக் கிடைத்தது..
கனவு தொடரும்...