கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



ஞாயிறு, நவம்பர் 01, 2015

நாம் நட்ட மரம்!

ஊற்றி மழை கூத்தடிக்கும் ஐப்பசியாம்- அதில்
ஊறி வெள்ளம் பெருக்கெடுத்த கார்த்திகையாம்!- ஆடிக்
காற்றெரித்து காய்ந்திருந்த புற்றரையாம்- துமி
கண்டதனால் பச்சை நிறம் காட்டியதாம்!

தெருவோர புல் செதுக்கி சுத்தமிடும்- அதனை
 சிலவேளை ஒலிபெருக்கி சத்தமிடும்!- மதில்
கரையோரம் வேம்பு இரண்டு நட்டுவிட்டு - மாடு
கடியாமல் மூடிக் கூடு கட்டிவிடு!

அப்பருடன் கன்றாய் நான் நட்ட மரம்- என்
ஆறடியை விஞ்சுயரம் தொட்ட மரம்!
கோப்படித்து நாலுதிசை சென்ற மரம்- வீட்டுக்
கூரையிலும் குப்பையினை கொட்டுமரம்!

செங்குருத்து சிலபொழுதில் பச்சையாகும்
சிறுநெட்டில் மொட்டெல்லாம் பூவாகும்!
எங்கிருந்தோ வந்ததெல்லாம் பழந் தின்னும்
இரவுதிர நிலமெங்கும் விதை கிடக்கும்!

மின்சாரமில்லாத காலமது-
விண்மீன்கள் துணையிருந்த நேரமது
மண்வறுக்கும் வெயிலரிப்பை தணிவிக்க
மரநிழலே வழிசமைத்த காலமது!

பலகாலம் கழிந்தபின்னர் யாழ்வந்தேன்
படும்பாடு மரமுந்தான் நான் கண்டேன்!
கிளை வெட்ட மின்சார சபையொன்று
கிணுகிணுக்கும் தொலைபேசி சபையொன்று!

ஆர் நட்ட மரமென்றும் அவரறியார்
ஏன் நட்ட மரமென்ற பொருளறியார்
தாம் தொட்ட கிளையெல்லாம் கத்தரித்தார்
தம் வேலை இதுவேயாம் கொக்கரித்தார்.

முடிவெட்டப் பழகுபவன் போலத்தான்
முதற் பழக்கக் கிளை தறித்த மூடர்காள்
வடிவொழுக கிளை கழிக்கும் வகையொன்றை
வழிதெரிந்து கொண்டீரேல் மரம் மகிழும்!

01.10.2015