கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



செவ்வாய், செப்டம்பர் 28, 2010

ஸ்கொலசிப்!!

அருமந்த பெடியனை உந்தாள் பழுதாக்கப்போகுது. அப்பிடித்தான் காணுற சனங்களும் றோட்டாலை போய் வாற ஆக்களும் சொல்லுறவை. அருமை பெருமையாய் ஒண்டை வைச்சுக் கொண்டு பேந்தேன் உந்தாள் அந்தப் பெடியனை இப்பிடி வளர்க்குது எண்டு கனபேருக்கு ஒரே குழப்பந்தான். பின்னை என்ன? வீட்டிலை ஒரே ஒரு பெடியனெண்டா ஒரே செல்லந்தான் எண்டு சனம் எதிர் பார்க்கிறதிலை என்ன பிழை. அதுக்காக இந்தாள் கட்டிப்போட்டு ஒவ்வொருநாளும் என்னை துவைச்செடுக்கிறது எண்டு நினைச்சா அது உங்கடை அறிவீனம். பாலர் வகுப்பிலேயே இருந்து எல்லாரும் ரியூசனுக்குப் போகேக்கை இந்தாள் ஏன் ஸ்கொலசிப் இற்கு கூட ஒருஇடமும் அனுப்பாம வைச்சிருக்கு எண்டு ஒருத்தருக்கும் விளங்கேல்லை.

நாங்கள் ஸ்கொலசிப் எடுத்தது 1989ம் ஆண்டு. அதுக்கு முந்தின இரண்டு ஆண்டுகளிலும் யாழ்ப்பாணம் இருந்தநிலையை நான் உங்களுக்குசொல்லத் தேவையில்லை. நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தனாங்கள். எங்கடை வீட்டை பக்கத்து நாட்டிலை இருந்து அமைதியை காக்க எண்டு வந்த படையினர் குடியிருந்தனர். அவையள் எங்களுக்கு வாடகை கீடகை ஒண்டும் தாறேல்லை. அப்பிடிக் கேக்கவும் ஏலாது. குடியிருக்க வந்தாக்கள் போட்ட சண்டையிலை (எங்களோடை இல்லை) எங்கடை வீடு உடைஞசு போச்சு. உடைஞ்ச வீட்டுக்கு வாடகை வாங்கேலாதுதானே. வாடகை தராம வந்திருந்தாக்கள் எங்கடை வீட்டை தங்கடை காம்ப் ஆக்கிச்சினம்.

அதுமாதிரி நாங்கள் அகதியா தங்கியிருந்த வீட்டுக்கும் வாடகை கட்டுறேல்லை. நாங்களே ஏதிலிகளாம் ! இதுக்கை நிவாரணமாய் தந்த கூப்பன் மாவும் இல்லாட்டா கனபேருக்கு சாப்பாடே இல்லை. அப்பா இடம் பெயர்திருந்த எங்கடை சொந்தக் காரர் வீட்டிலையும் சும்மா இருக்கேல்லை. மற்றவையளும் சும்மா இருக்கக் கூடாதெண்டோ என்னவோ சீட்டாட்டம், சுருட்டுக் குடிக்கிறது எண்டு பல தரப்பட்ட வேலையளை செய்து கொண்டிருக்கேக்ககை எங்கடை அப்பா தனக்கு தெரிஞ்ச வேலையான தோட்ட வேலை செய்தது.

வீட்டுக்குள்ள கச்சான் நடலாமோ எண்டா கனபேர் சாத்திரியாரிட்டைத்தான் போவினம். அப்பா போகேல்லை. கச்சான் நட்டார். பூப்புத்த கச்சான் நிலத்துக்கை புதைந்து கொண்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். கச்சான் கிளறி எடுக்கிற அண்டு சொன்னார் நிலத்துக்கு கீழை இருந்து எடுக்கிறதாலை இதுக்கு நிலக்கடலை எண்டு பெயர். இது நிலத்துக்கு கீழை இருந்து வந்தாலும் இது கிழங்கில்லை இந்த மரத்தின் காய் எண்டு! எனக்கு வயது அப்ப எட்டு!







“உதென்னப்பா! ” தோட்டத்துக்கை குந்தியிருந்த என்ரை கண்ணிலைபட்டது ஒரு பூடு. நாலுபக்கமும் இலை. நடு நரம்பு இளம் பச்சை பேந்து கடும் பச்சை. அது நல்ல வடிவு!! அப்பா சொன்னார் உதுதான் நன்னாரி! உதின்ரை வேர் நல்ல வாசம். நாரி நோவுக்கு நல்ல மருந்து. வேரைப் பிடுங்கிப் பார்த்தேன். மணந்தது. ஆனா அந்த மணம் எனக்குப் பிடிக்கவில்லை. இலையின் வடிவு பிடித்திருந்தது.

எங்கடை வீட்டை காம்ப் அடிச்சிருந்தாக்கள் போட்டினம். நாங்கள் வீட்டை வந்தம். தாவாரத்திலை மாடு படுத்தது. தாவாரத்தை ஒட்டிய, உடையாமல் கிடந்த விறாந்தையில் நாங்கள் படுத்தம். வீடு பாதுகாப்பானது. வெய்யில், மழை, சூடு, குளிர் என்பனவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பதையும். உடைந்த வீட்டில் இந்த பாதுகாப்புகள் குறைவு என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

வீட்டை துப்புரவாக்கினோம். உடைஞ்ச கண்ணாடியளைப் புறம்பாகவும், ஓட்டுத்துண்டை புறம்பாகவும், கல்லைப் புறம்பாகவும் பொறுக்கவேணும் என்று அப்பா சொன்னார். அதே போல தோட்டாக்களின் உறைகளையும் புறம்பாக பொறுக்கினேன். செப்பாலான அந்த மூடிகளில் இருபதைக் கொடுத்தால் ஐஸ்கிறீம் வண்டில் காரன் ஒரு ஐஸ்கிறீம் கொடுப்பான். ஒரு மாதமா நான் ஒவ்வொரு ஐஸ்கிறீம் குடித்தேன். உடைஞ்ச பெல்ஜியம் கண்ணாடிகளை ஒரு மூடை இரண்டு ரூபாப்படி விற்று அப்பாவுக்கு 10 ரூபா கிடைத்தது.








கோண்டாவிலுக்கை பழையபடி தோட்டம் செய்யத் தொடங்கியிட்டினம். மாதக்கணக்கிலை செய்யாம கிடந்ததாலை எல்லாத் தோட்டமும் புல் முளைத்துப் போய் இருந்தது. நானும் அப்பாவும் பின்னேரங்களில் அப்பா வேலை முடிந்து வந்த பிறகு புல் அறுக்கப் போவோம். அப்பா உழவாரத்தாலை செருக்குவார். நான் வரம்புப் புல்லை சின்னக் கத்தியாலை அரிவேன்.
“அப்பா கத்தியாலை வெட்டினா இதுக்கு நோகுமா?”
அப்பா சிர்த்தார். “நோகும் ஆனா சொல்லாது.”.
“ஏன் நோகும்?”
“ அதுக்கு உயிர் இருக்கு நோகும்! ”
“தாவரத்திற்கு உயிர் இருக்கோ? நான் நம்ப மாட்டன்”
அப்பா ஏதோ ஒரு பூட்டை தட்டினார். அதன் இலைகள் கூம்பின.
“என்ன உது?”
“தொட்டாற் சுருங்கி”
“ஏன் அப்பிடிச் சொல்லுறது”
“தொட்டவுடனை இலைகள் சுருங்கியிடும் அதாலை அந்தப் பெயர் வந்தது.”
“அப்ப காரணத்தோடைதான் பெயர் வைக்கோணுமா?”
“ஓம். எல்லாத்துக்கும் காரணத்தோடைதான் பெயர் வைக்கிறது. ஆனா சிலவேளை அதின்ரை காரணங்கள் மறந்து மயங்கிவிடும்”
நான் தாவரங்களுக்கு உயிர் இருக்கிதாய் சொன்னதை நம்பத் தொடங்கினேன்.





“இந்த மனிசனுக்கு விசர்! வாற வரியம் சோதினை வரப்போகுது. பெடியை படிக்க விடாம அங்கை இங்கை கூட்டிக் கொண்டு திரிஞ்சுகொண்டு.....” அப்பா இல்லாத நேரமாய்ப் பார்த்து அம்மா திட்டினா. அம்மா ஒரு ரீச்சர்.
“அம்மா ஸ்கொலசிப் எண்டா என்னம்மா?” கல்முனையிலிருந்து லீவிலை வந்து நின்ற அம்மாவிட்டை கேட்டேன்.
“ இந்தச் சோதினை பாஸ் பண்ணினாத்தான் பெரிய பள்ளிக்கூடம் போகலாம்”.
“பெரிய பள்ளிக்கூடம் எண்டா...”
“ஜப்னா ஹிண்டு மாதிரி” எல்லாத் தாய்மாரைப்போலவே அம்மாவும் சொன்னா.
“அங்கை பெடியள் மட்டுமே படிக்கிறவை?”
”ஓம். அதுக் கென்ன இப்ப?”
நான் ஒண்டும் பறையேல்லை. பொம்பிளைப் பிள்ளையள் இல்லாத பள்ளிக்கூடம் போய்ப் படிக்க எனக்கு விருப்பமேயில்லை.

அமுது, தனுஜா, பிரியேஸ், வாசன், உசங்கர் எல்லாரும் ஸ்கொலசிப் ரியூசனுக்கு போறவை. அவையின்ரை தாய்தேப்பன் கடைசி மூண்டு மாதமாவது ரியூசனுக்கு உங்கடை மகனையும் விடுங்கோ எண்டு கேட்டவை. அப்பா சிரிச்சார். நான் ரியூசனுக்கு போகேல்லை.

ஸ்கொலசிப் டெஸ்ட் நடந்தது. ஏதோ நல்லூர் திருவிழாவுக்கு போற மாதிரி பிள்ளையளை சோதினை எழுதவிட்டிட்டு தாய் தகப்பன்மார் வாசலிலை தவங்கிடந்தினம். எங்கடை அப்பா நல்லா எழுது எண்டு சொல்லிப் போட்டு தன்ரை ஒபிசுக்கு போட்டார்.

குறுக்காலை போன அட்மிசன் டெஸ்ட் பாஸ் பண்ணிதாலை என்னை ஜப்னா ஹிண்டுவிலை சேர்த்துவிட்டினம்.

பிறகு ஸ்கொலசிப் மார்க்சும் வந்தது. 181 மார்க்ஸ். நான் பாஸ்.

மனிசன் பெடியனைப் படிப்பிச்சுப் போட்டுது.
சனம் சொன்னது.

இண்டைக்கு ஆசிரியர் தினமாம்.
அப்பா கிளரிக்கல் சேவண்ட்.

அப்பா ஒருநாளும் படிப்பிக்கிறதில்லை!!!!

அப்பாவுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடலாமோ?????!!!!!!

06.10.2010