கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



புதன், நவம்பர் 03, 2010

விட்டுட்டு போனாலே போதும்!

தூக்கித்தான் தரவேண்டாம்
தூசு தட்டி விடவேண்டாம்
ஆக்கித்தான் தருவனென
அடுப்படிக்கும் வரவேண்டாம் - எம்மை
விட்டிட்டு போனாலே போதும் - நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!!

மலிவுக்கு தரவேண்டாம்
மடை திறந்து விடவேண்டாம்
பொலிவுக்கு கிடைத்தெல்லாம்
பொருள் என்று கெடவேண்டாம் - எம்மை
விட்டுட்டு போனாலே போதும்- நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!

அன்பு காட்ட வரவேண்டாம்
அடிவருடி விடவேண்டாம்
தன்பாட்டில் கிடைப்பதெலாம்
தடை செய்து விடவேண்டாம் - எம்மை
விட்டுட்டு போனாலே போதும்- நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!

காவலரண் தரவேண்டாம்
காலனென வரவேண்டாம்
மோதலது முடிந்த பின்னும்
முழிவியளம் தரவேண்டாம் - எம்மை
விட்டுட்டு போனாலே போதும்- நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!









செவ்வாய், செப்டம்பர் 28, 2010

ஸ்கொலசிப்!!

அருமந்த பெடியனை உந்தாள் பழுதாக்கப்போகுது. அப்பிடித்தான் காணுற சனங்களும் றோட்டாலை போய் வாற ஆக்களும் சொல்லுறவை. அருமை பெருமையாய் ஒண்டை வைச்சுக் கொண்டு பேந்தேன் உந்தாள் அந்தப் பெடியனை இப்பிடி வளர்க்குது எண்டு கனபேருக்கு ஒரே குழப்பந்தான். பின்னை என்ன? வீட்டிலை ஒரே ஒரு பெடியனெண்டா ஒரே செல்லந்தான் எண்டு சனம் எதிர் பார்க்கிறதிலை என்ன பிழை. அதுக்காக இந்தாள் கட்டிப்போட்டு ஒவ்வொருநாளும் என்னை துவைச்செடுக்கிறது எண்டு நினைச்சா அது உங்கடை அறிவீனம். பாலர் வகுப்பிலேயே இருந்து எல்லாரும் ரியூசனுக்குப் போகேக்கை இந்தாள் ஏன் ஸ்கொலசிப் இற்கு கூட ஒருஇடமும் அனுப்பாம வைச்சிருக்கு எண்டு ஒருத்தருக்கும் விளங்கேல்லை.

நாங்கள் ஸ்கொலசிப் எடுத்தது 1989ம் ஆண்டு. அதுக்கு முந்தின இரண்டு ஆண்டுகளிலும் யாழ்ப்பாணம் இருந்தநிலையை நான் உங்களுக்குசொல்லத் தேவையில்லை. நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தனாங்கள். எங்கடை வீட்டை பக்கத்து நாட்டிலை இருந்து அமைதியை காக்க எண்டு வந்த படையினர் குடியிருந்தனர். அவையள் எங்களுக்கு வாடகை கீடகை ஒண்டும் தாறேல்லை. அப்பிடிக் கேக்கவும் ஏலாது. குடியிருக்க வந்தாக்கள் போட்ட சண்டையிலை (எங்களோடை இல்லை) எங்கடை வீடு உடைஞசு போச்சு. உடைஞ்ச வீட்டுக்கு வாடகை வாங்கேலாதுதானே. வாடகை தராம வந்திருந்தாக்கள் எங்கடை வீட்டை தங்கடை காம்ப் ஆக்கிச்சினம்.

அதுமாதிரி நாங்கள் அகதியா தங்கியிருந்த வீட்டுக்கும் வாடகை கட்டுறேல்லை. நாங்களே ஏதிலிகளாம் ! இதுக்கை நிவாரணமாய் தந்த கூப்பன் மாவும் இல்லாட்டா கனபேருக்கு சாப்பாடே இல்லை. அப்பா இடம் பெயர்திருந்த எங்கடை சொந்தக் காரர் வீட்டிலையும் சும்மா இருக்கேல்லை. மற்றவையளும் சும்மா இருக்கக் கூடாதெண்டோ என்னவோ சீட்டாட்டம், சுருட்டுக் குடிக்கிறது எண்டு பல தரப்பட்ட வேலையளை செய்து கொண்டிருக்கேக்ககை எங்கடை அப்பா தனக்கு தெரிஞ்ச வேலையான தோட்ட வேலை செய்தது.

வீட்டுக்குள்ள கச்சான் நடலாமோ எண்டா கனபேர் சாத்திரியாரிட்டைத்தான் போவினம். அப்பா போகேல்லை. கச்சான் நட்டார். பூப்புத்த கச்சான் நிலத்துக்கை புதைந்து கொண்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். கச்சான் கிளறி எடுக்கிற அண்டு சொன்னார் நிலத்துக்கு கீழை இருந்து எடுக்கிறதாலை இதுக்கு நிலக்கடலை எண்டு பெயர். இது நிலத்துக்கு கீழை இருந்து வந்தாலும் இது கிழங்கில்லை இந்த மரத்தின் காய் எண்டு! எனக்கு வயது அப்ப எட்டு!







“உதென்னப்பா! ” தோட்டத்துக்கை குந்தியிருந்த என்ரை கண்ணிலைபட்டது ஒரு பூடு. நாலுபக்கமும் இலை. நடு நரம்பு இளம் பச்சை பேந்து கடும் பச்சை. அது நல்ல வடிவு!! அப்பா சொன்னார் உதுதான் நன்னாரி! உதின்ரை வேர் நல்ல வாசம். நாரி நோவுக்கு நல்ல மருந்து. வேரைப் பிடுங்கிப் பார்த்தேன். மணந்தது. ஆனா அந்த மணம் எனக்குப் பிடிக்கவில்லை. இலையின் வடிவு பிடித்திருந்தது.

எங்கடை வீட்டை காம்ப் அடிச்சிருந்தாக்கள் போட்டினம். நாங்கள் வீட்டை வந்தம். தாவாரத்திலை மாடு படுத்தது. தாவாரத்தை ஒட்டிய, உடையாமல் கிடந்த விறாந்தையில் நாங்கள் படுத்தம். வீடு பாதுகாப்பானது. வெய்யில், மழை, சூடு, குளிர் என்பனவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பதையும். உடைந்த வீட்டில் இந்த பாதுகாப்புகள் குறைவு என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

வீட்டை துப்புரவாக்கினோம். உடைஞ்ச கண்ணாடியளைப் புறம்பாகவும், ஓட்டுத்துண்டை புறம்பாகவும், கல்லைப் புறம்பாகவும் பொறுக்கவேணும் என்று அப்பா சொன்னார். அதே போல தோட்டாக்களின் உறைகளையும் புறம்பாக பொறுக்கினேன். செப்பாலான அந்த மூடிகளில் இருபதைக் கொடுத்தால் ஐஸ்கிறீம் வண்டில் காரன் ஒரு ஐஸ்கிறீம் கொடுப்பான். ஒரு மாதமா நான் ஒவ்வொரு ஐஸ்கிறீம் குடித்தேன். உடைஞ்ச பெல்ஜியம் கண்ணாடிகளை ஒரு மூடை இரண்டு ரூபாப்படி விற்று அப்பாவுக்கு 10 ரூபா கிடைத்தது.








கோண்டாவிலுக்கை பழையபடி தோட்டம் செய்யத் தொடங்கியிட்டினம். மாதக்கணக்கிலை செய்யாம கிடந்ததாலை எல்லாத் தோட்டமும் புல் முளைத்துப் போய் இருந்தது. நானும் அப்பாவும் பின்னேரங்களில் அப்பா வேலை முடிந்து வந்த பிறகு புல் அறுக்கப் போவோம். அப்பா உழவாரத்தாலை செருக்குவார். நான் வரம்புப் புல்லை சின்னக் கத்தியாலை அரிவேன்.
“அப்பா கத்தியாலை வெட்டினா இதுக்கு நோகுமா?”
அப்பா சிர்த்தார். “நோகும் ஆனா சொல்லாது.”.
“ஏன் நோகும்?”
“ அதுக்கு உயிர் இருக்கு நோகும்! ”
“தாவரத்திற்கு உயிர் இருக்கோ? நான் நம்ப மாட்டன்”
அப்பா ஏதோ ஒரு பூட்டை தட்டினார். அதன் இலைகள் கூம்பின.
“என்ன உது?”
“தொட்டாற் சுருங்கி”
“ஏன் அப்பிடிச் சொல்லுறது”
“தொட்டவுடனை இலைகள் சுருங்கியிடும் அதாலை அந்தப் பெயர் வந்தது.”
“அப்ப காரணத்தோடைதான் பெயர் வைக்கோணுமா?”
“ஓம். எல்லாத்துக்கும் காரணத்தோடைதான் பெயர் வைக்கிறது. ஆனா சிலவேளை அதின்ரை காரணங்கள் மறந்து மயங்கிவிடும்”
நான் தாவரங்களுக்கு உயிர் இருக்கிதாய் சொன்னதை நம்பத் தொடங்கினேன்.





“இந்த மனிசனுக்கு விசர்! வாற வரியம் சோதினை வரப்போகுது. பெடியை படிக்க விடாம அங்கை இங்கை கூட்டிக் கொண்டு திரிஞ்சுகொண்டு.....” அப்பா இல்லாத நேரமாய்ப் பார்த்து அம்மா திட்டினா. அம்மா ஒரு ரீச்சர்.
“அம்மா ஸ்கொலசிப் எண்டா என்னம்மா?” கல்முனையிலிருந்து லீவிலை வந்து நின்ற அம்மாவிட்டை கேட்டேன்.
“ இந்தச் சோதினை பாஸ் பண்ணினாத்தான் பெரிய பள்ளிக்கூடம் போகலாம்”.
“பெரிய பள்ளிக்கூடம் எண்டா...”
“ஜப்னா ஹிண்டு மாதிரி” எல்லாத் தாய்மாரைப்போலவே அம்மாவும் சொன்னா.
“அங்கை பெடியள் மட்டுமே படிக்கிறவை?”
”ஓம். அதுக் கென்ன இப்ப?”
நான் ஒண்டும் பறையேல்லை. பொம்பிளைப் பிள்ளையள் இல்லாத பள்ளிக்கூடம் போய்ப் படிக்க எனக்கு விருப்பமேயில்லை.

அமுது, தனுஜா, பிரியேஸ், வாசன், உசங்கர் எல்லாரும் ஸ்கொலசிப் ரியூசனுக்கு போறவை. அவையின்ரை தாய்தேப்பன் கடைசி மூண்டு மாதமாவது ரியூசனுக்கு உங்கடை மகனையும் விடுங்கோ எண்டு கேட்டவை. அப்பா சிரிச்சார். நான் ரியூசனுக்கு போகேல்லை.

ஸ்கொலசிப் டெஸ்ட் நடந்தது. ஏதோ நல்லூர் திருவிழாவுக்கு போற மாதிரி பிள்ளையளை சோதினை எழுதவிட்டிட்டு தாய் தகப்பன்மார் வாசலிலை தவங்கிடந்தினம். எங்கடை அப்பா நல்லா எழுது எண்டு சொல்லிப் போட்டு தன்ரை ஒபிசுக்கு போட்டார்.

குறுக்காலை போன அட்மிசன் டெஸ்ட் பாஸ் பண்ணிதாலை என்னை ஜப்னா ஹிண்டுவிலை சேர்த்துவிட்டினம்.

பிறகு ஸ்கொலசிப் மார்க்சும் வந்தது. 181 மார்க்ஸ். நான் பாஸ்.

மனிசன் பெடியனைப் படிப்பிச்சுப் போட்டுது.
சனம் சொன்னது.

இண்டைக்கு ஆசிரியர் தினமாம்.
அப்பா கிளரிக்கல் சேவண்ட்.

அப்பா ஒருநாளும் படிப்பிக்கிறதில்லை!!!!

அப்பாவுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடலாமோ?????!!!!!!

06.10.2010


















ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

என்ன திருக்கூத்து இது?


நல்லூரா, உன் கோயில் கொடியேறும் - இந்த
நாட்களிலே திருடருக்கு(தாலிக்) கொடி தேறும்!!
செல்லாத காசெல்லாம் கடலையாகும் - அது
தெரியாத ஆச்சிக்கு வயிறு காயும்!

புரதட்டை அடிக்கேக்கை நோக வேணும் - மணல்
புரள்வதற்கு ஏன் முருகா உருள வேண்டும்?
கோயிலுக்கை வேட்டி சேலை மட்டும் என்றார் - வெறும்
கொள்கையிலை பயனிருக்கா இல்லைஇல்லை!

உன்வீட்டை இடிச்செல்லோ கல்லை வைச்சு
ஒல்லாந்தர் கோட்டை கட்டிப் பார்த்தார் எண்டா
என்வீட்டை இடிச்சவனை என்ன செய்வாய்!
எட பொடியா நீயும் ஓர் இளிச்ச வாய்தான்!

15 08 2010

புதன், மே 26, 2010

மீண்டுவரல்!!!

வானத்தில் நிலவைக் கண்டோம்
வையத்தில் புயலைக் கண்டோம்
கானத்தினிசையைக் கண்டும் - அதன்
கருத்தினை காற்றில் விட்டோம்.

கடுமையாய்ப் புளுகல் செய்தோம்
கறைகளை மெழுகல் செய்தோம்
படுகிற பாட்டை எல்லாம் - கடவுள்
பார்க்கட்டும் என்று விட்டோம்.

எதிரியும் வளர்வான் உண்மை
என்பதை ஏற்க மறுத்தோம்
புரிதலை தொலைத்து விட்டோம்
புன்னகை புரிதலை விட்டோம்

ஊரெலாம் கேட்டோம் உதவி - எதிரி
உதைக்கிறான் என்றும் அழுதோம்!
நாடுகள் தேடிவந்து மீட்டு
நன்மைகள் செய்யும் என்று இருந்தோம்!

பலத்தினை இழக்கும்போதும்
பணிந்துசரண் கேட்டபோதும்
வழித்துணை யாருமின்றி
வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம்!

தோற்றுளோம் என்ற உண்மை
துன்பந்தான் என்ற போதும்
தோற்றதுஏற்று பிழைகள்
திருந்தலை மறந்து விட்டோம்

காட்டிலே கொஞ்ச மக்கள்
கண்ணீரில் கொஞ்ச மக்கள்
வீட்டிலே பிணமாய் நடந்து
வீழ்ந்துள்ள கொஞ்ச மக்கள்

கொஞ்சங்கள் கொஞ்சமாய்ச்சேர்ந்து
கூடுதல் ஆகிப்போச்சு!!!
மிஞ்சுயோர் காக்க இறைவா
மீண்டு நீ வருதல் வேண்டும்!!!

26 05 2010






வெள்ளி, மே 14, 2010

கட்டப் படுவது நானா?

சிறுத்தா(ல்)ள் இடையில் சிறுமி! - முத்தம்
சிணுங்கிக் கொடுக்கும் கருமி!
உரித்தால் பெருத்தாள் தெரியும் - சுவை
உவர்க்கும் இனிக்கும் அறியும்!

கேட்டால் மாட்டன் என்பாள் - நீ
கேடன் கள்ளன் என்பாள்
தோட்டா போல துளைத்து - உயிர்
துடைத்து வழித்துப் போவாள்.


கள்ளப் பார்வை பார்த்து - இதழ்
கசக்கும் என்பாள் வேர்த்து
வெள்ளம் ஏறிப்போச்சு - இனி
விளைநெல் பற்றிப் பேச்சு!

தலைக்கு மேலே வெள்ளம் -இனி
தலைப்பில் எனது உள்ளம்
வலைக்கு தப்பும் மீனா? - உனது
வழுக்கும் உடலும் தேனா?



கழுத்தில் கயிறு போட்டால்
கட்டப் படுவது நானா?
பழுத்த கனிகள் வீணா
பழுதடைய விடு வேனா?

14 05 2010

புதன், ஏப்ரல் 21, 2010

வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும்.

நாங்கள் திரும்பிப் பார்க்கிறனாங்கள் தான். பின்னையென்ன? இஞ்சை கவனிங்கோடா தம்பியவை என்று ஒரு குரல் சொல்லேக்கை கழுத்தை திருப்பி பார்க்காட்டா அவன் மனிசன் இல்லை கண்டியளோ! அனேகமாய் அது எங்கடை பக்கத்து வகுப்புத்தான். நாங்கள் உயிரியல். அந்த வகுப்பு மற்ஸ் காரரின்ரை. ஏல் ரியுசனெண்டா அப்பிடித்தான். ஒரு சின்னத்தட்டியாலைதான் வகுப்பு பிரிபட்டிருக்கும். அதாலைதான் எங்கடை காலத்திலை ரியுசனுக்கு கொட்டில்கள் என்ற பெயரும் இருந்தது. பழையாக்கள் சிலவேளை குழம்பிப் போவினம். அவையளுக்கு கொட்டில் என்றா கள்ளுக் கொட்டில்தான் விளங்கும்.


வேலாயுதம் எண்ட பெயர் கொமனோ தெரியாது. மணி ரியுசன் வேலாயுதம் மாஸ்டர் ( கனபேருக்கு அவரை கிளி மூக்கு எண்டாத் தான் தெரியும்) நிரு வேலாயுதம் மாஸ்டர் எண்டிருந்ததாலை இவரை வெக்ரர் வேலாயுதம் எண்டாத்தான் தெரியும்.

சயன்ஸ் ஹோல்தான் அப்ப யாழ்ப்பாண டவுணிலை சயன்சுக்கு இருந்த ஒரே ரியுசன். அதுக்கு பிறகு சின்னன் சின்னனா சிலது வந்தாலும் அதுதான் அப்ப ஏகபோகம். வெக்ரர் பக்கத்திலை வகுப்பெடுததா கணீரெண்டு இஞ்சாலையும் கேட்கும். எங்கடை வகுப்புக்கு வாத்தியார் இல்லாத நேரங்களிலை அல்லது அவையள் படிப்பிக்கிறது புரியாமல் அல்லது பிடியாமல் இருக்கிற நேர்த்திலை நாங்கள் வெக்ரரின்ரை வகுப்பைத்தான் வாய் பார்க்கிறது.

சிரியாதையுங்கோ! மற்ஸ் வகுப்பிலை அப்பிடியொண்டும் கிளியோபெற்றாக்கள் இருக்கேல்லை நாங்கள் திரும்பிப் பார்க்க. எங்கடை பயோ வகுப்புத்தான் தேவதைகளின்ரை இருப்பிடம். மற்ஸ்காரர்தான் எங்கடை வகுப்பை வாய் பார்க்கிறவை.

நானும் முதலிலை மற்ஸ் செய்யுறதெண்டுதான் இருந்தனான். உவங்கள் சொன்னாங்கள் மற்ஸ் வகுப்பெண்டா அது காய்ஞ்சு போய் இருக்கும். தவிர யுனிவேசிட்டிக்கு எடுபட்டு போனாலும் காய்ஞ்சு போய் இருக்கும் எண்டு! பேந்தேன் கரைச்சலை? உப்புடியொரு நிலைமையெண்டா பேந்தேன் மற்ஸ் படிப்பாண் எண்டுதான் பயோ படிச்சது.

நல்ல காலம். என்ரர் பண்ணியிட்டம். எங்கடை படிப்பின்ரை வள்ளலுக்குஏ எல் பாஸ் பண்ணுறதே பெரிய விசயம். இதிலை யுனி கிடைக்கிறதெண்டா.....
குண்டியிலை தட்டின புளுகம் பாருங்கோ. உதுக்கு ஒண்டும் செய்ய வேண்டாமே?
எங்கடை பட்ஜ் பாருங்கோ எல்லாத்தையும் வித்தியாசமா தான் யோசிக்கிறது. வழமையா என்ர பண்ணின பெடியள் தனித்தனிய தங்கடை சேர்மாருக்கு ஏதாவது வாங்கிக் குடுக்குறவைதானே. நாங்கள் எல்லாரும் சேர்ந்து எல்லா சேர்மாருக்கும் ஒன்றுகூடல் மாதிரி வைச்சு ஏதாவது செய்வம் எண்டு திட்டம் போட்டாச்சு.





திட்டம் போட்டா காணுமே? செய்யவேண்டாமே? அந்தமுறை இன்ஜினியரிங்கும் மெடிசினும் என்ரர் பண்ணுற ( அல்லது பண்ணக்கூடிய ரிசல்ட் இருக்கிற) எல்லாரும் சேந்து கூடிக் கதைச்சாச்சு. காசும் சேர்த்தாச்சு.

ஒன்று கூடல் ஒன்று இப்படி ஒரு தனியார் கல்வி நிலையத்தில் நடந்தது அதுதான் முதல்முறை என்று நினை்க்கிறன்.

எல்லாருக்கும் ஆச்சரியம். கெமிஸ்ரி மகாதேவா சேர் என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என்று பாடியபோது! சும்மா வகுப்பிலை வேடிக்கை பார்த்தாலே ஜேஸ் இங்கு கவனிப்பது என்று சொல்லுற ஆள் எல்லே!

வெக்கர் அண்டைக்கு தம்பியவை கவனியுங்கோடா எண்டு சொல்லேல்லலை. ஆனா எல்லாரும் கவனிச்சவை. “நான் உங்களுக்கு இரண்டு விசயம்தான் சொல்லப்போறன் - வாழ்க்கையிலை மறக்காதையுங்கோ” என்றார். ஒன்று சிகரெட் பிடிக்க பழகாதையுங்கோ. மற்றது தண்ணியடிக்க பழகாதையுங்கோ- கனபேர் தொடங்கு தொடங்கு எண்ணுவாங்கள். தண்ணியடிக்கிற நான் சொல்லுறன் தண்ணி சிகரெட் பழகாதையுங்கோ!

வெக்ரர் நாங்கள் கொழும்பு வரமுன்னமே வீட்டிலை சறுக்கி விழுந்து அகாலமாய் போய்விட்டார். நாங்களும் செத்த வீட்டிற்கு போனனாங்கள். கனபேருக்கு கண்ணுக்கை தண்ணி!

கொழும்பிலை எல்லாக் கூத்தும் ஆடினனாங்கள். கனபேர் சோசலா தொடங்குறம் எண்டிட்டு கவிண்டும் விழுந்தவங்கள். ஆனா நாங்கள் தண்ணியோ சிகரெட்டோ மறந்தும் தொடேல்லை. கனபேர் இப்ப சொன்னாலும் நம்ப மாட்டாங்கள்.

வெக்ரர் என்றா பருமன் மட்டுமில்லை. திசையும் இருக்கும்.









வெள்ளி, மார்ச் 12, 2010

திரும்பிப் பாராளோ?!!!

வானம் இடிக்கின்ற போதும்
மழைதான் நனைக்கின்ற போதும்
தோகை மயில் நீயிருந்தால் -என்
துயரம் தொலைந்து போகும்!

அழவே துடிக்கின்ற கண்கள்
அதனை மறைக்கின்ற இமைகள்
அழகே நீயருகிருந்தால்
அகலும் துயர்கள் அகலும்!

விடிவாய் இருப்பாய் எனக்கு
விரைவில் பதிலை அனுப்பு
அடியே உனக்கேன் அலுப்பு?
அதனால் எனக்குச் சலிப்பு!!!

கசியும் குருதி மனதில்
கடின நிலையோ அதனில்!
மசியாதிருந்தால் அடியே -என்
மறைவு எதிரில் அறியே!


ஞாயிறு, மார்ச் 07, 2010

இருட்டுக் காதல்! திருட்டுக் காதல்!

கற்றதெல்லாம் போதும் நீயும்
கத்தி கொண்டு வா - கட்டை
கத்தரித்துப்போவோம் சொந்தப்
புத்தி கொண்டு வா

வெற்றுமேனி தொட்டு ஆட
வெட்கம் என்னடி! - அதை
விட்டு விட்டு வந்தால்
சொர்க்கம் கண்மணி!

வாழ்வு இன்ப வாழ்வு உந்தன்
வாயில் உள்ளது - அந்த
வாயில் திறந்து இருந்தல்- சயன
பாயில் நல்லது

ஆருமில்லா இரவு நீயும்
அருகில் ஓடி வா - சென்றி
ஆமி கூடத் தூக்கம்
அழகே ஓடிவா!

இருட்டில் நானும் சிரிப்பன்
எதுக்கு தெரியுமா?
எந்தன் பல்லு வெளிச்சம்
உனக்கு வழியம்மா!

வெள்ளி, பிப்ரவரி 26, 2010

பித்துப் பிடிச்சிட்டு எனக்கு!

கட்டிப் பிடிக்கோணும்போல் இருக்கு- அவ
காதைக் கடிக்கணும்போல் இருக்கு!
குட்டி அழைக்கணும்போல் இருக்கு - சும்மா
கூட்டிக் கழிச்சுப் பார்! கணக்கு!

பட்ட கஷ்டங்கள் மறந்து- அந்தப்
பாவைப் பிள்ளையில் இருந்து
மொட்டு மலர்வது போல - காதல்
மூச்சு வருகுது மேலே!

கொட்டும் மழையெனக் கூதல் - அவ
கொவ்வை இதழ்களின் சாரல்
முட்டும் மலைகளில் மேகம் - குளிர்
முன்பனி தூவியே போகும்!

எட்டி நடக்கிறாள் கண்டு - இஞ்சை
ஏக்கத்தை மட்டுமே தந்து
வட்டி ஏறிச்சு மேலும் - கடன்
வந்து நெருக்குதே நாளும்!

நேற்றைய கனவிலே முத்தம் - ஓம்
நிச்சயம் இல்லையே சத்தம்
காற்றுடன் மட்டுமே சுற்றும் -ஒலி
காதலைச் சொல்லுமே நித்தம்!

எப்பத்தான் இறங்குமென் பித்தம்? - எனை
ஏற்றிடு ஏற்றிடு மட்டும்!
அப்பத்தான் மப்பெல்லாம் தீரும் - அன்பு
ஆளுமே வந்து நீர் பாரும்!!!!







வியாழன், பிப்ரவரி 25, 2010

தேவதையின் வரம்!

சுட்ட பற்றிஸ் விற்கும் தேநீர் சாலை- அதை
சுற்றும்போது கண்டன் என்ரை ஆளை!
மொட்டையாக பார்த்த பார்வை நெஞ்சை
மொத்திப் போக வைச்சாஅந்த வஞ்சை!

குந்தியிருந்தா அந்த வாங்கில் மூலை! அவ
குடியிருப்பு ஊரின் எந்த மூலை!?
சொந்தகாரி ஆகிவிட்டு போனா - வலையை
சுழிச்சுப்போட்டு ஓடுமொரு மீனா!

வெட்டியாக வீதிசுற்ற வைச்சா- சும்மா
விளைந்த ஒல்லித் தென்னம் பொச்சா!
கட்டி வெல்லம் தின்பம் என்ற ஆசை!
கடைசியிலை வைச்சா ஒரு பூசை!

அம்மாக்காரி சிரிச்சு மழுப்பிப் போனா
அப்பன்காரன் தேங்காய் உடைச்சார் வீணா!
மம்மல் வேளை வந்த மப்பு ஆச்சு - நானும்
மாட்டிக் கொண்டன் மானம் இப்ப போச்சு!

தேவதைகள் வரங்கொடுக்கும் என்று - மரத்தை
தினமும் வந்து பார்த்து கொண்டு நின்று!
மீதமுள்ள ஆசையெல்லாம் இன்று- உச்சி
மீதுஏறி ஆடும் என்னை கொன்று!