கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



வியாழன், ஜனவரி 07, 2021

மின்சாரக் கனவு

 அண்ணை நீங்கள் எலெக்ரிக் கார் பற்றி எழுதுங்கோவன்....

கேட்டு பலமாதங்களாயிற்று. கேட்டவரும் மறந்திருப்பார்.

இப்ப என்னட்டை எலெக்ரிக் காருமில்லை. ஆனா எழுதோணும் போல கிடக்குது.

இல்லாத போது இல்லாததன் ஞாபக ஏக்கங்கள் அதிகமாகவே வரும். அது மனித இயல்பு.


லீவ். Nissan கொம்பனியின் தனியே மின்சாரத்தில் ஓடும் படைப்பே leaf. Leading, Enviroment friendly Affordable Family carதான் லீவ்.

டெஸ்லா, பி எம் டபிள்யூ, மேசிடிஸ் போன்ற முன்னணி கம்பனிகள் தனியே மின்சாரத்தில் ஓடும் கார்களைத் தயாரித்திருந்தாலும், மின்சாரக்கார் என்றால் நிசான்லீவ் எண்டளவுக்கு உலகப்பிரசித்தத்தில் இருந்நது லீவ்.


மின்சாரத்தில் மட்டும் இயங்கும் கார்கள் பற்றி எனக்கு தெரிய வந்தது ஒரு கதை. அப்போது நான் கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் இரவுக் கடமையில் இருந்தேன். அப்போது நான் எந்தவிதமான விசேஷ வைத்தியத்துறையிலும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கவில்லை. அன்று இரவு குழந்தைகள் விடுதிக் கவனிப்பு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்நது. குழந்தைகள் என்றால் அழும்  அடம்பிடிக்கும். அவற்றை கையாள வேறுபல திறமைகளும் இருக்கவேண்டும். ஆடிக்கறக்கிற மாட்டை ஆடியும் பாடிக் கறக்கிற மாட்டை பாடியும் சமாளிக்கத் தெரியவேண்டும்.


அந்தக் குழந்தைக்கு பத்துப் பதினொரு வயதிருக்கும். காய்ச்சலுடன் வந்திருந்த குழந்தையை பரிசோதிக்கவேண்டும். குழந்தை கையில் ஏதோ வைத்திருந்தது. அப்பாவின்ர கார் சாவியை தாங்கோ, டொக்ரர் அங்கிள் பார்க்க வந்திருக்கிறார் பெற்றோர் எனக்கு உதவ முன்வந்திருந்தனர்.  அந்த நேரம் என்னிடம் காரும்இல்லை கார் பற்றிய அறிவும் இல்லை. ஆனால் கார் புரூம் எண்ட சத்த்தோடை ஓடும் எண்டது தெரியுந்தானே. கதையை தொடக்கினேன். உங்களுக்கு காரில் போகபிடிக்குமோ...குழந்தை நிமிர்ந்து பார்த்தது. யாரிவன் ஒர் பைத்தியக்காரன். கொழும்பு நெரிசலிலை பின்னை என்ன பஸ்ஸிலை போகவா பிடிக்கும் எண்டது போல பார்த்தது. விக்கட் விழாட்டிலும் பரவாயில். பந்து அகலக் கோட்டை தாண்டிப் போய்விட்டது.

உங்கடை கார் பெற்றோலிலை ஓடுமா இல்லை டீசலிலை ஓடுமா? அடுத்த பந்தை வீசினேன்.

 இரண்டும் தேவையில்லை. இந்தமுறை பந்து மட்டையில் பட்டு எல்லைக் கோட்டை தாண்டிவிட்டது. உருண்டு தாண்டியதா பறந்து தாண்டியதா...எனக்குக் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. எப்பன் சமாளிக்க கஸ்டமான குழந்தைதான்.


Back to basic

காரிலை புரூம் எண்ட சத்த்தோடை வந்தனிங்களா....


இல்லை அங்கிள். எங்கடை கார் சத்தம் போடாது.


ஏன்?


அது எலெக்ரிக் கார்.


இந்தமுறை அடி பட்ட பந்து இரண்டு கால்களுக்கு இடையால் உரசிக்கொண்டு எல்லைக் கோட்டை நெருங்கிக்க கொண்டிருந்தது.


அயர்நது போனேன்.  நிமிர்ந்து பார்த்தேன். 

ஓம் டொக்டர். அது எலெக்ரிக் கார்தான்.


அன்று இரவு வேலை செய்ததற்கு ஐநூறு ரூபா காசும் எலெக்ரிக் கார் இலங்கையில் இருக்கிறது என்ற அரிய தகவலும் எனக்குக் கிடைத்தது..



கனவு தொடரும்...

புதன், ஜூலை 22, 2020

மெய்ப் பொருள் காணாத அறிவு பாகம் ஒன்று

 2007

பிற்பகல்இரண்டு மணி...

டிரிங் டிரிங் டிரிங் டரிங்

அனே மகே போன் டிகக் கணேன் தியன்ன..

காசல் வீதி மகளிர் மருத்துவ மனையின் உள்ளக பயிற்சி வைத்தியரின்

CLI இல் யாழ்ப்பாண நம்பர்.

அம்மாவோ தெரியாது...மனிசி எங்கையேனும் கொம்மினிக்கேசனிலை போய் எடுக்கும்..

ஆனா இது அம்மாவில்லை.

சேர் நாங்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்து கதைக்கிறம்.

ஓம் சொல்லுங்கோ

நீங்கள் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிஞ்சனிங்களோ

ஓ அது நாலைஞ்சு மாதத்துக்கு முன்னை..

ஓம் சேர்...அதிலை நீங்கள் இன்ரவியுக்கு செலக்ட் பண்ணுப் பட்டிருக்கிறியள். நாளைக்கு  இரண்டு மணிக்கு இன்ரவியு . வருவியள் தானே.?

பேய்ப்பெட்டை, கொழும்பிலை இருந்து யாழ்ப்பாணத்துக்கு வாறதுக்கு பாஸ் எடுக்கோணும். அதுக்கே குறைஞ்சது இரண்டு கிழமையாகும். பேந்து பிளைட் புக் பண்ண வேணும்...உதெண்டும் தெரியாம.....அதைவிட காசல் டிரைக்ரர் கரந்தகொடவிடம் லீவெடுக்கிறது....அதுவும் இன்ரேன் நேரத்திலை....

மனதிலை கனக்க எண்ணங்கள் வந்து மோதினாலும் கோல் பண்ணி இன்ரவியூ எண்டாவது சொல்லிச்சுகளே என்ற நன்றி உணர்வுடன்.

நாளைக்கு என்னாலை வரேல்லாது...சொறி...மற்றவையை வச்சு இன்ரவியூ நடத்துங்கோ.....

அப்ப சேர் நாளண்டைக்கு எண்டா வருவியளா....

அவவும் விடுற பாடாய் இல்லை....

இல்லை தங்கச்சி நான் இப்ப கொழும்பிலை நிக்கிறன்..

ஓமோம் தெரியும் ..அந்த அட்ரசுக்கு கடிதம் போட்டனாங்கள். கிடைக்கேல்லையோ?

இல்லை,  எப்ப போட்டனியள்?

போன கிழமை..

பிள்ளை கப்பல் ஓடினாத்தான் கடிதம் வரும். கப்பல் ஓடுதோ...

இல்லை சேர். மூண்டு கிழமையா நிப்பாட்டி வைச்சிருக்கிறாங்கள்...

அப்ப கடிதம் கிடைக்காதெண்டு தெரியுந்தானே....

அப்ப வாற கிழமை வச்சா வருவியளோ

விடாக்கண்டி..

இல்லை இந்த முறை மற்றாக்களுக்கு வையுங்கோ. அடுத்தமுறைக்கு நான் வாறன்....

இல்லை சேர் அப்பிடி எண்டா முழு இன்ரவியூவையும் கான்சல் பண்ணோணும்..

சீச்சீ அப்பிடி ஒண்டும் செய்து போடாதையுங்கோ...மற்றவைக்கு வையுங்கோ. எனக்கு ஒரு குறையும் இல்லை.

இல்லை சேர் அப்பிடிச் செய்ய ஏலாது..

ஏன்?

நீங்கள் மட்டுந்தான் அப்பிளிக்கேசன் போட்டனியள். நீங்களும் வராட்டா கான்சல் தான் பண்ணோணும்.

ஓ அப்பிடியே..

சேர். நீங்கள் வராட்டா கடிதம் ஒண்டு போட்டு விடுங்கோ. இல்லாட்டா பிளக் லிஸ்ட்க்கு பெயர் போடும்..

ஏன் என்னத்துக்கு...

அப்பிளை பண்ணிட்டு ரிப்பிளை பண்ணாட்டா....

சரி பிள்ளை ..இண்டைக்கே கடிதம் போடுறன். ஆனா கப்பல் வரேக்கைதான் அது உங்களிட்டை கிடைக்கும்.....

பாகம் ஒன்று முத்திட்டு...மன்னிக்கவும்..முற்றிற்று...




வெள்ளி, ஆகஸ்ட் 10, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள்- நிறைவுப் பகுதி

சாதாரணமாக சூரியப்படல்களும் அதற்கான கருவிகளும் மிகவும் விலையானவை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதன் விலையில்வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. தவிர அரசாங்கம் சூரிய கலங்களின் அதன்  பாகங்களின் இறக்குமதிக்கு சுங்கவரி அறவிடுவதில்லை. இதனால் சூரியபடல்களை சாதாரணமக்களும் பொருத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதது.

தற்போது வரும் சூரிய படல்கள் வினைத்திறனானவை. ஒளிச்சகத்தியின் ஏறத்தாழ 20 வீதத்தை மின்னாக மாற்றக்கூடியன. ஒளியில்  இருந்து சக்தியை பதிப்பது என்பது இலாபகரமானது.தவிரவும் சூரியபடல்கள் விணகலங்களில் பாவிக்கப்பட்டு அதன்வினைத்திறன் பல ஆண்டுகளுக்கு உள்ளது நிருபிக்கப்பட்டுள்ளது. நாங்கள்  தற்போது பாவிக்கும் எந்த ஒரு மின் சாதனமும் ஆகக்கூடியது 10 ஆண்டுகளைத் தாண்டுவதில்லை. ஆனால் சூரியப்படல்கள் 25 ஆண்டுகால வாழ்வுகொண்டவை. அதாவது முதலாம் வருடத்தில் பாவித்த வினைத்திறனின் 80 வீதமான விளைத்திறன் 25 ஆண்டுகளின் பின்னரும் காணப்படும்.

வீட்டுக் கூரைகளுக்கு மேல் மின்படல்களைப் பொருத்தி அதிலிருந்து மின்னைப் பெறுவதை அரசும் தற்போது ஊக்குவிக்கிறது. இதற்காகக 6 வீத வருட வட்டியில் 5 ஆண்டுகளுக்கு மீளளிக்கும் முகமாக ரூ350000 கடனை பெற்றுக்கொள்ள வசதியுள்ளது.    இந்த பெறுமதியில் ஏறத்தாழ ஒரு சாதாரண வீட்டுக்கு தேவையான 200 அலகுகளை மாதாந்தம் பெற்றுக் கொள்ளலாம்.இந்த  வசதி அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளால் வழங்கப்படுகிறது.( வங்கிகளுடன் கவனமாக குறைந்த வட்டிக்கடனைக் கேட்கவேண்டும் . விசயம் தெரியாதவர்களுக்கு 6 வீதத்திலும் பார்க்கக் கூடிய வட்டிவீதத்தில் 13 அல்லது 14 வீதத்தில் தங்களிடமுள்ள  திட்டத்தை வங்கிகள் தலையில்  கட்டிவிடப் பார்க்கும்.!!!!!)


எமது பாவனைக்கு மேலதிகமாக நாம் அரசாங்கத்துக்கு வழங்கும் ஒவ்வொரு அலகு மின்வாரத்துக்கும் மின்சார சபை ரூ 22 வழங்கும். நாங்கள் பாவித்த மின்சாரத்தையும் நாங்கள் அரசுக்கு வழங்கிய மின்சாரத்தையும் அளக்க இரண்டு மின்மானிகள் வீட்டில் பொருத்தப்படும். இது நெற் அகௌண்டிங் எனப்படும்.


இவ்வாறு பொருத்தப்படும் சூரியப்படல்கள் மின்சார சபையின் மின் இணைப்புடன் தொடுக்கப்படுவதால் கிறிட் ரை (Grid tied) என்று அழைக்கப்படும். அதனால் மின்சாரசபை தனது திருத்த வேலைக்காக மின் இணைப்பை நிறுத்தும் போது சூரியப்படல்களும் தமது உற்பத்தியை நிறுத்தும்.அதாவது மின்சார சபை கரண்ட் இல்லையென்றால் வீட்டிற்கும் கரண்ட் இருக்காது. இந்த ஏற்பாடு மின் திருத்த வேலைகளில் இருக்கும் பணியாளர்களுக்கு எமது  மின் படல்கலால் உற்பத்தியான மின்சாரம் சென்று தாக்கதிருக்க காணப்படுகிறது.

தவிர மின்சாரக் கார்களுக்கு மின்சாரத்தை வழங்குவதன் மூலம் அதிக லாகத்தை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வீடு வீதிக்கு அருகிலும் ஒரு வாகனம்தரித்து நிற்கும் வசதியுடன் காணப்பட்டால் அவ்விடத்தில் 15 அம்பியர் வட்ட பிளக் பொயின்ட் ஒன்றை இட்டுவிட்டு உங்கள் வீட்டு அமைவிடத்தை plugshare.com மூலம் காட்டிவிட்டால் மினசார வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை மின்னேற்ற அவ்விடத்துக்கு வருவார்கள். சிறிய மின்மானி   
( ஏறத்தாழ 4000 பெறுமதியானது) ஒன்றை அந்த  பிளக்பொயின்ட்டுக்கு வரும் மின்சாரத்தை அளக்க பொருத்தினால் ஒரு அலகுக்கு ரூ 70 மூலம் மின்சாரத்தை விற்க முடியும். எனவே உற்பத்தியாகும் ஒவ்வொரு அலகிலும் ஏறத்தாழ ரூ 50 இலாபம்ஈட்ட முடியும். யாழ்ப்பாணத்தில் தற்போது மின்சார கார்கள் அதிகரித்துள்ளன. எனவே இது  எதில்காலத்தில் இலாபம்  வரும் தொழிலாக மாறும். மின்மானி பொருத்த முடியாதோர் மணித்தியாலத்திற்கு ரூ 100 வீதம் பெற்றுக் கொள்ள முடியும்.

சத்திக்கு பெற்றோலையும் மண்ணெண்ணையையும் நம்பி இராமல் மின்சாரத்திற்கு மாறுவது தேகத்திற்கும் தேசத்திற்கும் ஆரோக்கியமானது.


முற்றும்.

பல சூரிய படல் நிறுவனங்கள் காணப்படுகின்றன. எனக்குத் தெரிற்து யாழ்ப்பாணத்தில் இயங்கும்  தமிழர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களின் வலைப்பின்னலை கீழே இணைத்துள்ளேன். அந்நிறுவனங்களுடன் எந்தவித வர்த்தக தொடர்பும் எனக்கில்லை. ( No conflict of interest)விரும்பியவர்கள் கிளிக் பண்ணி தகவல் அறியலாம்.


http://ecosteem.lk/wordpress/

https://solarpowerlk.com/


சனி, ஆகஸ்ட் 04, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள் - பகுதி 5

சூரியப் படல்களில் பித்துப் பிடித்திருந்தபோதுதான் கொழும்பில் அந்தக் கண்காட்சி நடந்தது. அதில் காற்றிலிருந்து மின்னை எடுப்பது சூரியப்படல்களிலிருந்து மின்னை எடுப்பது போன்றவற்றை காட்சிப் படுத்தியிருந்தார்கள். அதே போல யாழ்ப்பாணத்தில் நடந்த வர்த்தக கண்காட்சியிலும் சூரியப்படல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டு கண்காட்சியிலும் ஒரே தன்மை காணப்பட்டது. எல்லாமே யானை விலை குதிரை விலை. ஆனாலும் இருபத்தைந்து வருடங்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம் அதுவும் இலவசமாக என்ற போது அந்தச் செய்தி இனிப்பாகத்தான் இருந்தது. ஏறத்தாழ 10 வருடங்கள் மின்சாரத்தை காணாத யாழ்ப்பாணத்தானுக்கே ஆன கனவு!

கனவுகளில் வீட்டைக் கட்டியெழுப்பமுடியாதே! அதிலும் வியாபாரிகள் சொல்லும் வார்த்தைகளை மட்டும் நம்பி காரியத்தில் இறங்கமுடியாது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிக்காவிட்டாலும் தின்னவேலிச் சந்தைக்குப் போகும்  போது கண்ட வாசகம் மனதை எப்பவுமே தொட்டுச்செல்லும்..மெய்ப்பொருள் காண்பது அறிவு!

அப்படி ஒரு தேடலில் இருந்தபோதுதான் முகப்புத்தகத்தில்  அவர் சிக்கினார். எமது பராயத்தவர். மின்பொறியியலாளராக இருந்தார். முகப்புத்தகத்தில் தான் பாவித்த சூரியப்படல்களையும் காற்றிலிருந்து மின்னெடுக்கும் கருவியையும் படமாகப் போட்டிருந்தார்.

மெய்ப் பொருள் காண்பதற்கு இடம்  கிடைத்துவிட்டது.
 அவரிடம் கண்டறிந்த உண்மைகளை உங்களிடம் பகிர்கிறேன்.

தேவபாடையில் இக்கதை செய்தவர் 
மூவரானவர் தம்முளும் முந்திய 
நாவினர் உரையின்படி நான் தமிழ்ப் 
பாவி.....

அதாவது அவர் சொன்னதைத்தான் நானும் சொல்ல வருகிறேன் ....

சூரிய படல்களில் வருவது நேரோட்டம். பொதுவாக அது 12 வோல்ட் ஆக இருக்கும். அதை 240 வோல்ட்  ஆடலோட்டமாக மாற்றியே வீட்டுக்கு இணைக்க முடியும்.  அதை மாற்றித்தருவது இன்வேட்டர் எனும் கருவி!
 தற்போது ஸ்ரிங் இனடவேட்டர் என்ற கருவியும் மைக்ரோ இன்வேட்டர் என்ற கருவியும் புழக்கத்தில் உள்ளன.

ஸ்ரிங்க் இன்வேட்டர் என்ற கருவி நேரோட்டம் எல்லாவற்றையும் எல்லா சூரிய படல்களிடமும் இருந்து பெற்று அதை நேரோட்டமாக மாற்றும். இது பெரிய பெட்டி போன்று காணப்படும். இது பல்வேறு அளவுகளில் ( எதாரணமாக 3 kw 5 kw 7 kw) போன்ற அளவுகளில் காணப்படும். எமது தேவைக்கு ஏற்றபடி தெரிவு செய்யலாம். ஒப்பீட்டு அளவில் விலை குறைந்தது. ( மைக்ரோ இன்வேட்டருடன் ஒப்பிடும்போது.)
மைக்ரோ இன்வேட்டர் பெயருக்கு தகுந்தாற்போல் சிறியது. சூரிய படல்களுக்கு கீழே பொருத்தப்படுவது. உடனடியாக நேரோட்டத்தை ஆடலோட்டமாக மாற்றித் தருவதால் சகத்தி இழப்பு குறைவு.
( நேரோட்டத்தை மிக நீண்ட தூரத்திற்கு கம்பிகள் மூலம் கடத்தும் போது சத்தி இழப்பு ஏற்படும்.) ஆனால் சற்று விலை கூடியது.

சூரிய படல்களுடன் இன்வேட்டரை இணைப்பது மிக இலகுவானது. தற்போது வரும் படல்கள் பிளக் இணைப்புகளுடன் வருவதால் ஒன்றுடன்ஒன்று சரியாகப் பொருந்தும்படி செருக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

( மின்சார இணைப்புகள் பொதுவாக இலக்ரிசியன்களால் செயயப்பட வேண்டும். இணைய அறிவுடன் நீங்கள் இணைக்க முனைவது ஆபத்தாக முடியலாம்)


படல்களிடம் பெற்ற மின்சாரத்தை இன்வேட்டர்கள் மூலம் ஆடலோட்டமாக மாற்றிய பின்னர் அதனை வீட்டு இணைப்புடன் இணைக்க முன்னர் இடிமின்னல் தாக்கம் ஏற்படாது இருக்கவும் அதிக அழுத்தம் CEB கரண்டில் வரும்போது படல்களைப் பாதுகாக்கவும் சாதனங்கள் இணைக்கப்படும்.

படல்கள் இன்வேட்டர்கள் மற்றுமு் கருவிகள் இலங்கை மின்சார சபையால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றுக்கு அமைவாக இருக்கவேண்டும். அவ்வாறு அமையாத சாதனங்களை இணைப்பது சட்டவிரோதமானது. 

சூரியப்படல்கள் அளவு kWp  or Wp எனும் அளவில் குறிக்கப்படும்.அதாவது 250 Wp என்றால் இந்தப்படலில்இருந்து நியம அளவு பிரமாணங்களில் பெறக்கூடிய உச்ச சத்தி 250 வாற்களாகும். 250 Wp அளவுடைய நான்கு படல்கள் இணைக்கப்பட்டால் அது 1 kWp ஐ தரும். நடைமுறையில் பார்க்கும்போது 250 Wp என்பது ஆகக் கூடியது 200 W சத்தியையே தரும்.

சூரிய படல்களின் மின் உற்பத்தியானதுஒளிச் செறிவு ,சூழல் வெப்பநிலை , ஒளிவிழும் சாய்வு என்பவற்றில் தங்கியிருக்கும்.

காலையில் உற்பத்தி குறைவாகவும் மதியத்தில் உற்பத்தி அதிகமாகவும் காணப்படும்.

தற்போது வரும் சாதனங்கள் ஒவ்வொரு மின்படல்களிலிருந்து வரும் சத்தியை கண்காணிக்ககூடிய வசதிகளுடன் வருகின்றன.


எனது படல்களிலிருந்து இன்று விளைந்த சக்தியின் அளவை கீழ்வரும் வரைபில் காணலாம்.


படல்களிலிருந்து வரும் சக்தியின் அளவை முகில்கள் குறைக்கும். ஆனால் மழை பெய்வது நல்லது. ஏனென்றால் படல்களில் படியும் தூசு கழுவப்படும்போது படல்களுக்கு வெல்லும் ஒளியின்அளவு அதிகரிக்கும்.
 ( தூசு படிந்தால் நீரால் கழுவுவுதன் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.)

இலங்கை பூமியின் வடவரைக்கோளத்தில் இருக்கிறது. எனவே சூரியப்படல்கள் தெற்கு நோக்கி சற்று சாய்ந்து இருந்தால் படல்களில் செங்குத்தாக படும் ஒளி அதிகரிக்கும். அதனால் மின்  உற்பத்தி  அதிகரிக்கும்.


தேடல் தொடரும்.


© வாயுபுத்திரன்.
04.08.2018


வியாழன், ஜூலை 26, 2018

வெளிச்சத்தைவிற்போம் வாருங்கள்.-பகுதி நான்கு

கம்பஸ் முடிந்து வேலை கிடைத்து கேகாலையில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மின்சாரம் பற்றிய கவலையுமில்லை. வாழ்க்கை சுகமாக ஒடிக்கொண்டிருந்தது. 

யாழ்ப்பாணத்தக்கு வேலை செய்யச் சென்றபோதுதான் மீண்டும் மின்சாரம் பற்றிய நினைப்பே வந்தது. அதற்கு சனி ஞாயிறு எண்டால் மின்சாரத்தை வெட்டி வைக்கும் மின்சார சபையும்  ஒரு காரணம். அவைகள் மரக்கொப்பு வெட்டுறம் ஹை டென்சன் மாபிளிலை காபன் கழுவுறம் எண்டு அரைவாசி நாள் கரண்டை கட்  பண்ணிப் போடுவாங்கள்.

மின்சாரத்திலை தீப்பிடிச்ச மாதிரி நிகழ்ச்சி வந்து கொஞ்ச நாளிலே இடம் பிடித்தது. நான் வேலை செய்து கொண்டிருந்த இடத்தின்  விரிவுரை மண்டபங்கள் மூன்றாம் மாடியில் இருந்தது. அதற்கு மாணவர்கள் பாண் போறணை எண்டு பெயர் வைத்திருந்தார்கள். மத்தியானம் அதுக்குள்ளை போய்க் குந்தினா அண்டைக்கு குளிச்சமாதிரி வேர்த்து ஒழுகும். மனிசர் நிம்மதியா நித்திரை கொள்ள ஏலாது. கிறீம் ஒவ் த சொசயிட்டி எண்டு அவங்களை எடுத்து வைச்சுக்கொண்டு யாழ்ப்பாண வெயிலில் சீட்வெக்கையிக்கை இருத்தினதிலை எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அதுக்குள்ளை பெடியளும்  சேர்ந்து உதுக்கு ஒரு வழி பண்ண வேண்டும் எண்டு கடிதம்  அனுப்பியிருந்தாங்கள்.

கடிதம்  சபை விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

உவைக்கு என்ன வேணுமாம்.  அது அவைத்தலைவர்.

ஒருதரும் ஒரு கதையில்லை.

மௌனம்.

அந்தமண்டபத்துக்கு  ஏசியை பூட்டலாந்தானே... நான் திருவாயைத் திறந்தேன்.

ஆட்டிலெறி அடிச்சவுடனை அலேட்  ஆகிறமாதிரி எல்லாரும் என்ரை முஞ்சியை தடவினார்கள்.

ஆமாம் ஆமாம் எண்டு தலையாட்டுறதை தவிர வேறேதும் அறியாத அந்த சபையில் வந்து சில மாதங்களே ஆனஒருத்தன்  இப்பிடி வாயைதிறப்பான் என  ஒருத்தரும் கனவிலையும் நினைக்கேல்லை போலை...

உது உவளவுக்கும் ஏசிபூட்டுறதெண்டா  என்னசிலவாகும் எவ்வளவு கரண்ட வேணும் எண்டெல்லாம் எமக்குத் தெரியுமே? அவைத் தலைவரின் சீற்றம் சிறிது எட்டிப் பார்த்தது..


ஓ அதுக்கென்ன... எவ்வளவு காசு சும்மா  சிலவளியாம திரும்பிபப்போகுது...முந்திப்படிச்ச ஆக்களிடமிருந்து எவ்வளவு காசு வருகுது. அதுகளை எடுத்து ஏசியையும்அதுக்குகரண்டுக்கு மேலை சோலரையும் பூட்டிவிடாச் சரிதானே... நாங்கள் இனி கிறீன்எனர்ஜியை யோசிக்க வேணும்...


ஏதோ ஒரு பெரிய சாதனையை செய்துவிட் மாதிரி நான் இறும்பூதெய்துவதுக்குள்  மல்ரிபரல்இரைஞ்சமாதிரி ...

கொழும்பிலை இருந்து வந்திட்டு பேக்கதை விசர்க் கதை கதையாதையுங்கோ...

கிபிர் வந்து நல்லாய்ப் பதிஞ்சு போட்டது போலிருந்தது...

நானும் விடேல்லை. வாழ்க்கை திறன் படிப்பிச்ச  இலங்கஸ்வரன் சேர் நீ எதிர் காலத்திலை லோயராய்த் தான் வருவாயெண்டுதிருவாய் மலர்ந்ததை நினைவில் கொண்டு கீழை இருந்து பிப்ரி கலிபராலை வெடிக்கத் தொடங்கினேன்...

சமர் நீண்டு கொண்ருந்தது..

எல்லாரும் மணிக்கூட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.. வழமையா 1 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு முடியுற கூட்டம் அண்டைக்கு முடியேக்கை 5மணி...

பெண்கள் அணியினர் கண்களால் கெஞ்சத்  தொடங்கியிருந்தனர்...
இனி கூட்டம் முடிந்து பிள்ளையளை ஏற்றிக்கொண்டுவந்து கரண்ட் நிற்கமுன்னம் இரவுக்கு சமைக்கவும் வேணும்.

ஆனா அவையளின்ரை கஷ்ட காலம்.. கலியாண கட்டாத ஒன்றும் பேரப்பிள்ளை கண்ட ஒன்றும் வீட்டை வேலை ஒன்றும் இல்லாமல் போறணைக்கு ஏ சி போடுறதை பற்றிபுலம்பிக் கொண்டிருந்தன..


புலம்பல் தொடரும்....

© வாயுபுத்திரன்
26.07.2018




செவ்வாய், ஜூலை 24, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள்- பகுதி மூன்று

அறிவியல் கழகம் இணுவிலில் இருந்தது. எங்கள் பரிசோதனைகளின் களமாக அது விளங்கியது. அப்போது  எங்கள்  ஆராய்ச்சி சாம்பலிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பதாக இருந்தது. ஆண்டு பத்து விஞ்ஞான புத்தக அறிவுடன் யாழ்ப்பாணத்துக்கே சாம்பலிலிருந்து மின்சாரம் வழங்கும் பரிசோதனையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். சாம்பலுக்குள் இரு பக்கமும் ஈயத்தகடை வைத்தபோது வோல்டோ மீற்றர் அசைவை காட்டியது. உரேக்கா எண்டு கத்த  இருந்த நேரத்திலைதான் அந்த ஐந்து  சியாமாச் செற்றிகளும் வந்து  தாங்கள்  கொண்டுவந்த சாமான்களைஎறிந்துபோட்டு ஓடின. சாமான்கள் பெருஞ்சத்தத்துடன் வெடித்தன. எங்கையோ கிட்டடியிலை விழுந்திருக்கோணும். காற்றின் அமுக்கம் அறிவியல் கழகம் வரை வந்து  போனது.

எங்கடை ஆராய்ச்சி இடையிலை குழம்பிக் போக சியாமாச் செற்றி மட்டும் காரணமில்லை. மோகன் தன்ரை ஏ எல் படிக்கும் அண்ணனின் இரசாயன புத்தகத்தை வாசித்து வந்தசெய்தியும் தான் காரணம். அதாவது காரத்தில் அல்லது அமிலத்தில் உலோக தகடுகளை வைக்கும்போது மின்னழுத்தவேறுயாடு வரும் என்றதே அது. தவிர வெவ்வேறு உலோகங்களுக்கு வெவ்வேறு அழுத்த வேறுபாடு வரும் எண்டு எழுதியிருந்தது. இன்னொருவகையில் சொல்லப் போனால் நாங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை ஆரோ ஒருத்தன் நூறு ஆண்டுகளுக்கு முன்னே சொல்லிவிட்டான்...


களைச்சுப்போய் தென்னை மரத்தடியில் இருக்கேக்கதான் சச்சோஅண்ணை அதைக் கொண்டு வந்தார்...

அது ஒரு சிறிய சூரியப் படல்.. விளங்கிற தமிழிலை சொல்லுறதெண்டா கின்ன சோலர் பனல். இப்ப நீங்கள் கையிலை வைச்சுப் பாவிக்கிற 10 .1 டப்பின்ரை அளவு இருக்கும். அந்தப் பனல் நேரடியாக சிறிய ரேப் ரெக்கோடருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. 

வெய்யிலில் வைத்தபோது கசட் பாடியது....கால் வலிக்கும்  கை வலிக்கும மாறப் போவதில்லை. எங்கள் கனவு நனவாகு மட்டும் சேசசசசசசா ரரரரப் போாாாவவவதில்லை. முகில் வந்து வெகிச்சம் குறையும் போதெல்லாம் டேப் இழுக்கத் தொடங்கியது.

நாங்கள்  சோலரை சின்ன கசியோ மணிக்கூடுகளில்  கண்டிருக்கிறோம். ஆனால் இவ்வளவு பெரிய , இரண்டு கைகளையும் மறைக்கக் கூடிய, ஒரு டேப் றைக்கோடரையே பாட வைக்கக் கூடிய பெரிய பனலை நாங்கள் கண்டதில்லை. 

கனவு சாம்பலிலிருந்து சூரியக் கலங்களுக்கு தொத்திக் கொண்டது.


கனவுகள் தொடரும்.



©வாயுபுத்திரன்
24.07.2018




சனி, ஜூலை 07, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள் - பகுதி இரண்டு

பென்ரொச் பற்றரி உட்பட அனைத்துபற்றரிகளும்  பொருளாதாரத் தடையால் யாழ்ப்பாணம் வராத காலத்திலை கட்டையிட்டை ஆறு ரீசாசபிள் பென்ரோச் பற்றரிகள் என்னெண்டு வந்ததென எனக்குத் தெரியாது.ஆனாலும் அந்தபற்றியளிலை இரண்டைஎனது பாவனைக்கு அவன் தந்துதவியிருந்தான். 

பென்ரோச் பற்றிகளை சார்ஜ்பண்ணவெண்டால் ஒரு சார்ஜரும் எங்களிடம்  இல்லை.சைக்கிள் டைனமோவில் இருந்து ரேடியோவுக்கு கொடுக்கும் கம்பிகளை இணைத்து சார்ஜர் சப்ளை கொடுக்கலாம். பற்றரியை இறுக்கிப் பிடிக்கும் கோல்டராக எங்களது பழைய விளையாட்டுச் சாமானிலை பற்றரி போடுற பகுதி பாவிக்கப்பட்டது. அப்பிடி வியையாட்டுச் சாமான்கள் இல்லாத வீடுகளில் வெள்ளை எஸ் லோன் பைப்பும் பூட்டூசியும் பாவிக்கப்பட்டது.

மின்சாரம் இருந்துவிட்டு மின்சாரம் இல்லாமல் போன வலியை யாழ்ப்பாணம் நன்கு அனுபவித்தது.

கலியாண வீடுகள் சாமத்திய சடங்குகள் எண்டு நடக்கேக்கை மட்டும் மின்பிறப்பாக்கிகள் பயன்படும். இந்த ஜெனரேட்டர்கள் கூட பொருளாதாரக் தடைக்கு உட்பட்டவை. பழைய தண்ணிப்பம்பியின் மிசினும் ரிவைண்ட் பண்ணப்பட்டு டைனமோக்களாக மாற்றப்பட்ட மின்சார மோட்டர்களும் இணைந்து ஒரு பலகையில் பூட்டப்பட்டு மினி ஜெனரேட்டர்களாக மாறின. ஒல்வொருவர் குடும்பத்திற்கும் கொடுக்கப்பட்ட அரை லிட்டர் மண்ணெயும்சேர்க்கப்பட்டு ஐந்துவீட்டர் மண்ணெண்ணை சேர்க்கப்பட்டது. இந்த மாதிரி ஜெனரேட்டர் இரவு முழுதும் வேலை செய்யவெண்டால் ஐந்து அல்லது ஆறு லீட்டர் மண்ணெண்ணை வேணும். 

சக்திமூலங்கள் யாவும் தடைப்பட்ட போதிலும் மக்கள் சக்தியுடனேயே இருந்தார்கள். எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகனஓட்டங்களும் வாகனபுகையும் இல்லாத நகரமாக யாழ்ப்பாணம் விளங்கியது.

எரிகிற மின்விளக்கு எண்டால் அவை கலியாணவீடு செத்த வீட்டில் அல்லது ஆசுப்பத்திரியை அடையாளம் காட்ட எண்டு ICRC சுற்று வட்டாரத்தில் எரியவிடும் மின்விளக்குகளாக இருந்தன. சந்தியில் ICRC வைத்த மின்விளக்குகளில் படித்ததனால் பல ஆபிரகாம் லிங்கன்களை அரசாங்கமும் ICRC யும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தன.

அப்போதுஆண்டு பத்து படித்துக்கொண்டிருந்த நானும் எனது நண்பன் மோகனனும் சமுதாயத்தின் சக்தி தேவையை பூர்த்தி செய்வோம் என சபதமெடுத்து சாம்பலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பரிசோதனைகளில் இறங்கினோம். எள் என்ன முன்னம் எண்ணையாக நிற்கும் அவன் நவாலியில் பற்றரிக் கடையில்பழுதாகி எறிந்த ஈய நெய்யரிகளைக் காண்டு வந்தான். 

அடுப்பில் அலுமினிய தட்டை வைத்து அதில்நெய்யரித் தட்டுகளை வைத்து உருக்கி ஈயம் பெறப்பட்டது.


சோதினைகள் தொடரும்....


© வாயுபுத்திரன்
07.07.2018

வியாழன், ஜூலை 05, 2018

வெளிச்சத்தை விற்போம் வாருங்கள்.



தலைப்பை கண்ட உடனையே நீங்கள் சரி உந்தாளும் யாவாரத்திலை இறங்கியிட்டுது எண்டுதான் நினைச்சிருப்பியள். பின்னை நீங்களும் என்னைமாதிரித்தானே இருப்பியள். அவசரக்குடுக்கையள்...பொறுங்கோ நான் சொல்ல வாறதை பொறுமையாக் கேளுங்கோ...

சின்னவகுப்பிலை நீர் காற்று வெப்பம் வெளிச்சம் எல்லாம் இயற்கையானது தூய்மையானது எண்டைல்லாம் படிச்சிருப்பியள். அதிலை தண்ணியை விற்கிற கதை யாரேனும் உங்காலை தீவுப்பக்கம் இருந்துவந்து சொன்னாத்தான் உண்டு. எங்கடை வீட்டுக் கிணறு எந்தளவு ஆழம் எண்டு நீட்டு வயர் போட்டு கலக்கி இறைக்கிற தறுமுவைக்கேட்டாச் சொல்லும். அதிலும் ஊற்று இருக்கு பாருங்கோ சும்மா கடகடவெண்டு ஆறு மாதிரி பெருக்கெடுக்கும். எங்கடை கிணறும் எங்கடைமுன்வீட்டு மனேச்சரின் கிணறும் அப்பித்தான். அம்மிக் குழவியை ஓட்டி ஊற்றை அடைச்சாத்தான் ஒட்ட  இறைக்கலாம்...தண்ணியெண்டா தின்னவேலித் தண்ணியும் தோத்துப்போம்...

ம் . அது எல்லாம் அந்தக்காலம்.

இப்ப தண்ணியும் ஒரு இழுவையிலை வற்றிப்போகுது. அதைவிட உவங்கள்  தண்ணிக்கே எண்ணை கலந்த கதையை சொன்னாப்பிறகு.....

என் செய்யுறது...நானும் காசுக்குத்தான் தண்ணி வாங்கிறனான்...

1990-1995 காலப்பகுதி..
நாங்கள் பள்ளிக்கூடம் போய் மூளை கீளைகொஞ்சம் கொஞசமாக வளரத்தொடங்கின நேரம்......

சனம் எல்லாம் பொருளாதாரத்தடை கஸ்டம் எண்டெல்லாம் பேக்கதை கதைக்கும் பாருங்கோ....சிங்களவனைத் திட்டுங்கள்... விசர்ச் சனம் ...
சிங்களவன் கடவுள் பாருங்கோ..கடவுள்...
கடவுள்  கஸ்டத்தை கொடுத்துத் தான் தடுத்தாட்கொள்ளுறவர் எண்டு அறுபத்து மூன்று நாயனார் கதையும் தெரிஞ்ச சனத்துக்கு விளங்கும்.

உந்தக்கோதாரியிலை விழுந்த கோதம்ப மா இல்லை கண்டியளோ....

மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு.. பெற்றோல் இல்லவே இல்லை.

ரயர்இல்லாததிலை வாழைப்பழமா தேய்ந்த ரயிரெல்லாம் சைக்கிளிலை இருக்கும். வாழைப்பழமா இருந்தாலும் ஆணி கீணி ஒண்டும் அதிலை ஏறாது...
ஆணி எல்லாம்தடை பாருங்கோ..தெருவிலை கறள் ஆணிகிடந்தாலும் களவெடுத்துக் கொண்டுபோடுவாங்கள். பேந்தெங்கை வாழைப்பழ டயரிலை ஆணி ஏற....

சைக்கிள் டைனமோவிலை வாற கறண்ட் ஆடலோட்டம் எண்டும் அதை நாலு டயோட் போட்டு நேரோட்டம் ஆக்கலாம் எண்டதும் தெரியும் அதிலை வாற ஹம் சத்தத்தை நாலு பிக்கோ பரட் கொண்டன்சரை போட்டு வெட்டலாம்  எண்டதும் லெனினின்ரை அண்ணையும் சுரேஸ் அண்ணையும் சொல்லிதந்து செய்தும் தந்தவை...

போட்டிக்கு ஓட கூப்பிட்டாலும் கட்டை எங்களோடை ஓட வரமாட்டான். அவன்ரை சைக்கிலை இருந்து டைனமோவிலை கரண்ட் வந்து அவன்ரை ரிசாஐ் பென்ரோச் பற்றரி நாலும் மின்னனேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்....வேகமா ஓடினா பற்றறிகள் பழுதாப்போடும் எண“டு அவனுக்குத் தெரியும். கல்லுண்டாய் காற்று வந்து ஆனைக்கோட்டைக்கே அடிச்சாலும்அவன்ரை சைக்கிள் சீரான மெதுவோட்டம் ஓடும்....






வெளிச்சம் தொடரும்.....
© வாயுபுத்திரன்
05.07.2018

 வெளிச்சத்தை விற்போம் வாருங்கள் - பகுதி இரண்டு

ஞாயிறு, நவம்பர் 01, 2015

நாம் நட்ட மரம்!

ஊற்றி மழை கூத்தடிக்கும் ஐப்பசியாம்- அதில்
ஊறி வெள்ளம் பெருக்கெடுத்த கார்த்திகையாம்!- ஆடிக்
காற்றெரித்து காய்ந்திருந்த புற்றரையாம்- துமி
கண்டதனால் பச்சை நிறம் காட்டியதாம்!

தெருவோர புல் செதுக்கி சுத்தமிடும்- அதனை
 சிலவேளை ஒலிபெருக்கி சத்தமிடும்!- மதில்
கரையோரம் வேம்பு இரண்டு நட்டுவிட்டு - மாடு
கடியாமல் மூடிக் கூடு கட்டிவிடு!

அப்பருடன் கன்றாய் நான் நட்ட மரம்- என்
ஆறடியை விஞ்சுயரம் தொட்ட மரம்!
கோப்படித்து நாலுதிசை சென்ற மரம்- வீட்டுக்
கூரையிலும் குப்பையினை கொட்டுமரம்!

செங்குருத்து சிலபொழுதில் பச்சையாகும்
சிறுநெட்டில் மொட்டெல்லாம் பூவாகும்!
எங்கிருந்தோ வந்ததெல்லாம் பழந் தின்னும்
இரவுதிர நிலமெங்கும் விதை கிடக்கும்!

மின்சாரமில்லாத காலமது-
விண்மீன்கள் துணையிருந்த நேரமது
மண்வறுக்கும் வெயிலரிப்பை தணிவிக்க
மரநிழலே வழிசமைத்த காலமது!

பலகாலம் கழிந்தபின்னர் யாழ்வந்தேன்
படும்பாடு மரமுந்தான் நான் கண்டேன்!
கிளை வெட்ட மின்சார சபையொன்று
கிணுகிணுக்கும் தொலைபேசி சபையொன்று!

ஆர் நட்ட மரமென்றும் அவரறியார்
ஏன் நட்ட மரமென்ற பொருளறியார்
தாம் தொட்ட கிளையெல்லாம் கத்தரித்தார்
தம் வேலை இதுவேயாம் கொக்கரித்தார்.

முடிவெட்டப் பழகுபவன் போலத்தான்
முதற் பழக்கக் கிளை தறித்த மூடர்காள்
வடிவொழுக கிளை கழிக்கும் வகையொன்றை
வழிதெரிந்து கொண்டீரேல் மரம் மகிழும்!

01.10.2015




புதன், நவம்பர் 03, 2010

விட்டுட்டு போனாலே போதும்!

தூக்கித்தான் தரவேண்டாம்
தூசு தட்டி விடவேண்டாம்
ஆக்கித்தான் தருவனென
அடுப்படிக்கும் வரவேண்டாம் - எம்மை
விட்டிட்டு போனாலே போதும் - நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!!

மலிவுக்கு தரவேண்டாம்
மடை திறந்து விடவேண்டாம்
பொலிவுக்கு கிடைத்தெல்லாம்
பொருள் என்று கெடவேண்டாம் - எம்மை
விட்டுட்டு போனாலே போதும்- நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!

அன்பு காட்ட வரவேண்டாம்
அடிவருடி விடவேண்டாம்
தன்பாட்டில் கிடைப்பதெலாம்
தடை செய்து விடவேண்டாம் - எம்மை
விட்டுட்டு போனாலே போதும்- நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!

காவலரண் தரவேண்டாம்
காலனென வரவேண்டாம்
மோதலது முடிந்த பின்னும்
முழிவியளம் தரவேண்டாம் - எம்மை
விட்டுட்டு போனாலே போதும்- நெருப்பில்
வெந்த நிலம் விளைநிலமாய் மாறும்!









செவ்வாய், செப்டம்பர் 28, 2010

ஸ்கொலசிப்!!

அருமந்த பெடியனை உந்தாள் பழுதாக்கப்போகுது. அப்பிடித்தான் காணுற சனங்களும் றோட்டாலை போய் வாற ஆக்களும் சொல்லுறவை. அருமை பெருமையாய் ஒண்டை வைச்சுக் கொண்டு பேந்தேன் உந்தாள் அந்தப் பெடியனை இப்பிடி வளர்க்குது எண்டு கனபேருக்கு ஒரே குழப்பந்தான். பின்னை என்ன? வீட்டிலை ஒரே ஒரு பெடியனெண்டா ஒரே செல்லந்தான் எண்டு சனம் எதிர் பார்க்கிறதிலை என்ன பிழை. அதுக்காக இந்தாள் கட்டிப்போட்டு ஒவ்வொருநாளும் என்னை துவைச்செடுக்கிறது எண்டு நினைச்சா அது உங்கடை அறிவீனம். பாலர் வகுப்பிலேயே இருந்து எல்லாரும் ரியூசனுக்குப் போகேக்கை இந்தாள் ஏன் ஸ்கொலசிப் இற்கு கூட ஒருஇடமும் அனுப்பாம வைச்சிருக்கு எண்டு ஒருத்தருக்கும் விளங்கேல்லை.

நாங்கள் ஸ்கொலசிப் எடுத்தது 1989ம் ஆண்டு. அதுக்கு முந்தின இரண்டு ஆண்டுகளிலும் யாழ்ப்பாணம் இருந்தநிலையை நான் உங்களுக்குசொல்லத் தேவையில்லை. நாங்கள் இடம்பெயர்ந்து இருந்தனாங்கள். எங்கடை வீட்டை பக்கத்து நாட்டிலை இருந்து அமைதியை காக்க எண்டு வந்த படையினர் குடியிருந்தனர். அவையள் எங்களுக்கு வாடகை கீடகை ஒண்டும் தாறேல்லை. அப்பிடிக் கேக்கவும் ஏலாது. குடியிருக்க வந்தாக்கள் போட்ட சண்டையிலை (எங்களோடை இல்லை) எங்கடை வீடு உடைஞசு போச்சு. உடைஞ்ச வீட்டுக்கு வாடகை வாங்கேலாதுதானே. வாடகை தராம வந்திருந்தாக்கள் எங்கடை வீட்டை தங்கடை காம்ப் ஆக்கிச்சினம்.

அதுமாதிரி நாங்கள் அகதியா தங்கியிருந்த வீட்டுக்கும் வாடகை கட்டுறேல்லை. நாங்களே ஏதிலிகளாம் ! இதுக்கை நிவாரணமாய் தந்த கூப்பன் மாவும் இல்லாட்டா கனபேருக்கு சாப்பாடே இல்லை. அப்பா இடம் பெயர்திருந்த எங்கடை சொந்தக் காரர் வீட்டிலையும் சும்மா இருக்கேல்லை. மற்றவையளும் சும்மா இருக்கக் கூடாதெண்டோ என்னவோ சீட்டாட்டம், சுருட்டுக் குடிக்கிறது எண்டு பல தரப்பட்ட வேலையளை செய்து கொண்டிருக்கேக்ககை எங்கடை அப்பா தனக்கு தெரிஞ்ச வேலையான தோட்ட வேலை செய்தது.

வீட்டுக்குள்ள கச்சான் நடலாமோ எண்டா கனபேர் சாத்திரியாரிட்டைத்தான் போவினம். அப்பா போகேல்லை. கச்சான் நட்டார். பூப்புத்த கச்சான் நிலத்துக்கை புதைந்து கொண்டது. எனக்கு ஒரே ஆச்சரியம். கச்சான் கிளறி எடுக்கிற அண்டு சொன்னார் நிலத்துக்கு கீழை இருந்து எடுக்கிறதாலை இதுக்கு நிலக்கடலை எண்டு பெயர். இது நிலத்துக்கு கீழை இருந்து வந்தாலும் இது கிழங்கில்லை இந்த மரத்தின் காய் எண்டு! எனக்கு வயது அப்ப எட்டு!







“உதென்னப்பா! ” தோட்டத்துக்கை குந்தியிருந்த என்ரை கண்ணிலைபட்டது ஒரு பூடு. நாலுபக்கமும் இலை. நடு நரம்பு இளம் பச்சை பேந்து கடும் பச்சை. அது நல்ல வடிவு!! அப்பா சொன்னார் உதுதான் நன்னாரி! உதின்ரை வேர் நல்ல வாசம். நாரி நோவுக்கு நல்ல மருந்து. வேரைப் பிடுங்கிப் பார்த்தேன். மணந்தது. ஆனா அந்த மணம் எனக்குப் பிடிக்கவில்லை. இலையின் வடிவு பிடித்திருந்தது.

எங்கடை வீட்டை காம்ப் அடிச்சிருந்தாக்கள் போட்டினம். நாங்கள் வீட்டை வந்தம். தாவாரத்திலை மாடு படுத்தது. தாவாரத்தை ஒட்டிய, உடையாமல் கிடந்த விறாந்தையில் நாங்கள் படுத்தம். வீடு பாதுகாப்பானது. வெய்யில், மழை, சூடு, குளிர் என்பனவற்றிலிருந்து பாதுகாக்கிறது என்பதையும். உடைந்த வீட்டில் இந்த பாதுகாப்புகள் குறைவு என்பதையும் நான் அறிந்து கொண்டேன்.

வீட்டை துப்புரவாக்கினோம். உடைஞ்ச கண்ணாடியளைப் புறம்பாகவும், ஓட்டுத்துண்டை புறம்பாகவும், கல்லைப் புறம்பாகவும் பொறுக்கவேணும் என்று அப்பா சொன்னார். அதே போல தோட்டாக்களின் உறைகளையும் புறம்பாக பொறுக்கினேன். செப்பாலான அந்த மூடிகளில் இருபதைக் கொடுத்தால் ஐஸ்கிறீம் வண்டில் காரன் ஒரு ஐஸ்கிறீம் கொடுப்பான். ஒரு மாதமா நான் ஒவ்வொரு ஐஸ்கிறீம் குடித்தேன். உடைஞ்ச பெல்ஜியம் கண்ணாடிகளை ஒரு மூடை இரண்டு ரூபாப்படி விற்று அப்பாவுக்கு 10 ரூபா கிடைத்தது.








கோண்டாவிலுக்கை பழையபடி தோட்டம் செய்யத் தொடங்கியிட்டினம். மாதக்கணக்கிலை செய்யாம கிடந்ததாலை எல்லாத் தோட்டமும் புல் முளைத்துப் போய் இருந்தது. நானும் அப்பாவும் பின்னேரங்களில் அப்பா வேலை முடிந்து வந்த பிறகு புல் அறுக்கப் போவோம். அப்பா உழவாரத்தாலை செருக்குவார். நான் வரம்புப் புல்லை சின்னக் கத்தியாலை அரிவேன்.
“அப்பா கத்தியாலை வெட்டினா இதுக்கு நோகுமா?”
அப்பா சிர்த்தார். “நோகும் ஆனா சொல்லாது.”.
“ஏன் நோகும்?”
“ அதுக்கு உயிர் இருக்கு நோகும்! ”
“தாவரத்திற்கு உயிர் இருக்கோ? நான் நம்ப மாட்டன்”
அப்பா ஏதோ ஒரு பூட்டை தட்டினார். அதன் இலைகள் கூம்பின.
“என்ன உது?”
“தொட்டாற் சுருங்கி”
“ஏன் அப்பிடிச் சொல்லுறது”
“தொட்டவுடனை இலைகள் சுருங்கியிடும் அதாலை அந்தப் பெயர் வந்தது.”
“அப்ப காரணத்தோடைதான் பெயர் வைக்கோணுமா?”
“ஓம். எல்லாத்துக்கும் காரணத்தோடைதான் பெயர் வைக்கிறது. ஆனா சிலவேளை அதின்ரை காரணங்கள் மறந்து மயங்கிவிடும்”
நான் தாவரங்களுக்கு உயிர் இருக்கிதாய் சொன்னதை நம்பத் தொடங்கினேன்.





“இந்த மனிசனுக்கு விசர்! வாற வரியம் சோதினை வரப்போகுது. பெடியை படிக்க விடாம அங்கை இங்கை கூட்டிக் கொண்டு திரிஞ்சுகொண்டு.....” அப்பா இல்லாத நேரமாய்ப் பார்த்து அம்மா திட்டினா. அம்மா ஒரு ரீச்சர்.
“அம்மா ஸ்கொலசிப் எண்டா என்னம்மா?” கல்முனையிலிருந்து லீவிலை வந்து நின்ற அம்மாவிட்டை கேட்டேன்.
“ இந்தச் சோதினை பாஸ் பண்ணினாத்தான் பெரிய பள்ளிக்கூடம் போகலாம்”.
“பெரிய பள்ளிக்கூடம் எண்டா...”
“ஜப்னா ஹிண்டு மாதிரி” எல்லாத் தாய்மாரைப்போலவே அம்மாவும் சொன்னா.
“அங்கை பெடியள் மட்டுமே படிக்கிறவை?”
”ஓம். அதுக் கென்ன இப்ப?”
நான் ஒண்டும் பறையேல்லை. பொம்பிளைப் பிள்ளையள் இல்லாத பள்ளிக்கூடம் போய்ப் படிக்க எனக்கு விருப்பமேயில்லை.

அமுது, தனுஜா, பிரியேஸ், வாசன், உசங்கர் எல்லாரும் ஸ்கொலசிப் ரியூசனுக்கு போறவை. அவையின்ரை தாய்தேப்பன் கடைசி மூண்டு மாதமாவது ரியூசனுக்கு உங்கடை மகனையும் விடுங்கோ எண்டு கேட்டவை. அப்பா சிரிச்சார். நான் ரியூசனுக்கு போகேல்லை.

ஸ்கொலசிப் டெஸ்ட் நடந்தது. ஏதோ நல்லூர் திருவிழாவுக்கு போற மாதிரி பிள்ளையளை சோதினை எழுதவிட்டிட்டு தாய் தகப்பன்மார் வாசலிலை தவங்கிடந்தினம். எங்கடை அப்பா நல்லா எழுது எண்டு சொல்லிப் போட்டு தன்ரை ஒபிசுக்கு போட்டார்.

குறுக்காலை போன அட்மிசன் டெஸ்ட் பாஸ் பண்ணிதாலை என்னை ஜப்னா ஹிண்டுவிலை சேர்த்துவிட்டினம்.

பிறகு ஸ்கொலசிப் மார்க்சும் வந்தது. 181 மார்க்ஸ். நான் பாஸ்.

மனிசன் பெடியனைப் படிப்பிச்சுப் போட்டுது.
சனம் சொன்னது.

இண்டைக்கு ஆசிரியர் தினமாம்.
அப்பா கிளரிக்கல் சேவண்ட்.

அப்பா ஒருநாளும் படிப்பிக்கிறதில்லை!!!!

அப்பாவுக்கு ஆசிரியர் தினம் கொண்டாடலாமோ?????!!!!!!

06.10.2010


















ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

என்ன திருக்கூத்து இது?


நல்லூரா, உன் கோயில் கொடியேறும் - இந்த
நாட்களிலே திருடருக்கு(தாலிக்) கொடி தேறும்!!
செல்லாத காசெல்லாம் கடலையாகும் - அது
தெரியாத ஆச்சிக்கு வயிறு காயும்!

புரதட்டை அடிக்கேக்கை நோக வேணும் - மணல்
புரள்வதற்கு ஏன் முருகா உருள வேண்டும்?
கோயிலுக்கை வேட்டி சேலை மட்டும் என்றார் - வெறும்
கொள்கையிலை பயனிருக்கா இல்லைஇல்லை!

உன்வீட்டை இடிச்செல்லோ கல்லை வைச்சு
ஒல்லாந்தர் கோட்டை கட்டிப் பார்த்தார் எண்டா
என்வீட்டை இடிச்சவனை என்ன செய்வாய்!
எட பொடியா நீயும் ஓர் இளிச்ச வாய்தான்!

15 08 2010

புதன், மே 26, 2010

மீண்டுவரல்!!!

வானத்தில் நிலவைக் கண்டோம்
வையத்தில் புயலைக் கண்டோம்
கானத்தினிசையைக் கண்டும் - அதன்
கருத்தினை காற்றில் விட்டோம்.

கடுமையாய்ப் புளுகல் செய்தோம்
கறைகளை மெழுகல் செய்தோம்
படுகிற பாட்டை எல்லாம் - கடவுள்
பார்க்கட்டும் என்று விட்டோம்.

எதிரியும் வளர்வான் உண்மை
என்பதை ஏற்க மறுத்தோம்
புரிதலை தொலைத்து விட்டோம்
புன்னகை புரிதலை விட்டோம்

ஊரெலாம் கேட்டோம் உதவி - எதிரி
உதைக்கிறான் என்றும் அழுதோம்!
நாடுகள் தேடிவந்து மீட்டு
நன்மைகள் செய்யும் என்று இருந்தோம்!

பலத்தினை இழக்கும்போதும்
பணிந்துசரண் கேட்டபோதும்
வழித்துணை யாருமின்றி
வாழ்க்கையைத் தொலைத்து விட்டோம்!

தோற்றுளோம் என்ற உண்மை
துன்பந்தான் என்ற போதும்
தோற்றதுஏற்று பிழைகள்
திருந்தலை மறந்து விட்டோம்

காட்டிலே கொஞ்ச மக்கள்
கண்ணீரில் கொஞ்ச மக்கள்
வீட்டிலே பிணமாய் நடந்து
வீழ்ந்துள்ள கொஞ்ச மக்கள்

கொஞ்சங்கள் கொஞ்சமாய்ச்சேர்ந்து
கூடுதல் ஆகிப்போச்சு!!!
மிஞ்சுயோர் காக்க இறைவா
மீண்டு நீ வருதல் வேண்டும்!!!

26 05 2010






வெள்ளி, மே 14, 2010

கட்டப் படுவது நானா?

சிறுத்தா(ல்)ள் இடையில் சிறுமி! - முத்தம்
சிணுங்கிக் கொடுக்கும் கருமி!
உரித்தால் பெருத்தாள் தெரியும் - சுவை
உவர்க்கும் இனிக்கும் அறியும்!

கேட்டால் மாட்டன் என்பாள் - நீ
கேடன் கள்ளன் என்பாள்
தோட்டா போல துளைத்து - உயிர்
துடைத்து வழித்துப் போவாள்.


கள்ளப் பார்வை பார்த்து - இதழ்
கசக்கும் என்பாள் வேர்த்து
வெள்ளம் ஏறிப்போச்சு - இனி
விளைநெல் பற்றிப் பேச்சு!

தலைக்கு மேலே வெள்ளம் -இனி
தலைப்பில் எனது உள்ளம்
வலைக்கு தப்பும் மீனா? - உனது
வழுக்கும் உடலும் தேனா?



கழுத்தில் கயிறு போட்டால்
கட்டப் படுவது நானா?
பழுத்த கனிகள் வீணா
பழுதடைய விடு வேனா?

14 05 2010